இந்தியா

நடிகர் கோவிந்தா மீண்டும் தேர்தலில் போட்டி

Published On 2024-03-24 14:28 IST   |   Update On 2024-03-24 14:28:00 IST
  • கோவிந்தாவின் இந்த நடவடிக்கையால் காங்கிரஸ் கட்சிக்கும் நெருக்கடி ஏற்பட்டது.
  • அரசியலில் மீண்டும் நுழைந்து தேர்தலில் போட்டியிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாலிவுட் திரைப்படங்களில் பிரேக் டான்ஸ் ஆடி புகழ்பெற்றவர் நடிகர் கோவிந்தா. கடந்த 1980-ம் ஆண்டு முதல் இவர் 165 திரைப்படங்களில் நடித்து உள்ளார். கடந்த 2004-ம் ஆண்டு காங்கிரசில் இணைந்தவர், வடக்கு மும்பையில் போட்டியிட்டு வென்றார். இங்கு 5 முறை பா.ஜ.க. எம்.பி.யாக இருந்த முன்னாள் மத்திய மந்திரி ராம் நாயக்கை சுமார் 50 ஆயிரம் வாக்குகளில் தோல்வியுறச் செய்தார்.

பாராளுமன்ற கூட்டங்களுக்கு வராமல் இருந்தவர் மீது கடும் விமர்சனங்கள் கிளம்பின. கோவிந்தாவின் இந்த நடவடிக்கையால் காங்கிரஸ் கட்சிக்கும் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் 2009-ல் அவர் அரசியலில் இருந்து விலகி நடிப்பைத் தொடர்ந்தார்.

தற்போது மகாராஷ்டிரா முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா பிரிவில் இணைந்து மீண்டும் தேர்தலில் போட்டியிட உள்ளார். பா.ஜ.க. ஆதரவில் ஆட்சி செய்யும் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவை நேற்று முன்தினம் நடிகர் கோவிந்தா சந்தித்து பேசினார். இதையடுத்து அவர் அரசியலில் மீண்டும் நுழைந்து தேர்தலில் போட்டியிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

வடமேற்கு மும்பை தொகுதியின் தற்போதைய எம்.பி.யாக கஜனன் உள்ளார். ஏக்நாத் பிரிவு சிவசேனாவில் இருப்பவர்களுக்கு அங்கு மீண்டும் வாய்ப்பளிக்க அவரது கட்சி விரும்பவில்லை. இதனால் அந்த தொகுதியை முக்கியக் கூட்டணியான பா.ஜ.க. தன்வசப்படுத்த முயன்றது. இப்போது நடிகர் கோவிந்தாவின் அரசியல் மறுநுழை வால் சூழல் மாறியுள்ளது.

Tags:    

Similar News