இந்தியா

கேரள மாநிலம் இடுக்கியில் விளை நிலங்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் மீண்டும் அட்டகாசம்

Published On 2023-01-29 10:46 IST   |   Update On 2023-01-29 10:46:00 IST
  • விளை நிலங்களில் இருந்து யானைகள் வெளியேறி விட்டாலும், இன்னும் வனப்பகுதிக்கு திரும்பவில்லை என கூறப்படுகிறது.
  • பலாப்பழத்திற்கு அடிமையான யானைகள் அவற்றை தேடி விளை நிலங்களை சேதப்படுத்துவது தொடர்ந்து வருகிறது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் காட்டு யானைகள் அடிக்கடி எஸ்டேட் பகுதிக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. கடந்த சில நாட்களாக இடுக்கியில் உள்ள சந்தன்பாறை மற்றும் சின்னக்கனல் கிராம பஞ்சாயத்து எல்லையோர வனப்பகுதியில் இருந்து யானைகள் ஊர்ப்பகுதிக்கு வந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் மீண்டும் யானைகளின் அட்டகாசம் தொடங்கி உள்ளது. தேவிகுளம் தாலுகாவில் உள்ள பி.எல்.ராம் கிராமத்தில் சுற்றித் திரிந்த யானைகள் கூட்டம் அங்குள்ள வீட்டை கடுமையாக தாக்கி சேதப்படுத்தி உள்ளது.

பலாப்பழத்திற்கு அடிமையான அரிகொம்பன் மற்றும் சாக்க கொம்பன் யானைகள் தான் தற்போது விளை நிலங்களுக்குள் நுழைந்து சேதப்படுத்தி வருவதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த யானைகள் மிகவும் ஆபத்தானவை என கூறும் அவர்கள், யானைகளை காட்டுக்குள் விரட்ட தொடர்ந்து முயற்சிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்தனர்.

விளை நிலங்களில் இருந்து யானைகள் வெளியேறி விட்டாலும், இன்னும் வனப்பகுதிக்கு திரும்பவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து சந்தன்பாறை பஞ்சாயத்து தலைவர் லிஜூ வர்கீஸ் கூறுகையில், 2 முரட்டு யானைகளால், எங்கள் கிராம மக்கள் அச்சத்துடன் உள்ளனர். இரவில் கூட அவர்கள் தூங்காமல் உள்ளனர். யானைகளுக்கு பயந்து விவசாய நிலங்களில், பலாப்பழங்கள் பயிரிடுவதை நிறுத்தி விட்டனர். இருப்பினும் பலாப்பழத்திற்கு அடிமையான யானைகள் அவற்றை தேடி விளை நிலங்களை சேதப்படுத்துவது தொடர்ந்து வருகிறது என்றார்.

Tags:    

Similar News