இந்தியா

கேரளாவில் கன மழைக்கு வாய்ப்பு- 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

Published On 2023-06-18 16:51 IST   |   Update On 2023-06-18 16:51:00 IST
  • மழையின் காரணமாக கேரளாவில் தற்போது சூறைக்காற்று வீசி வருகிறது.
  • மழையின் காரணமாக கேரளா முழுவதும் பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருகின்றன.

திருவனந்தபுரம்:

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மாநிலத்தில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக பத்தனம்திட்டா, கோட்டயம், ஆலப்புழா, இடுக்கி மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் மழையின் வேகம் அதிகமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்த 5 மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த மழையின் காரணமாக கேரளாவில் தற்போது சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால் சில இடங்களில் மரங்கள் முறிந்து உள்ளன.

இதற்கிடையில் மழையின் காரணமாக கேரளா முழுவதும் பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருகின்றன. குறிப்பாக டெங்கு காய்ச்சல், எலிக்காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் போன்றவை காரணமாக பாதிக்கப்பட்ட பலரும் மருத்துவமனைக்கு வரத் தொடங்கி உள்ளனர். மாநிலத்தில் 1½ லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதில் 877 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எர்ணாகுளத்தில் நேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காய்ச்சலில் பாதிக்கப்பட்டதால், அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கூட்டம் அலைமோதுகிறது. இதனை கருத்தில் கொண்டு மாநில சுகாதாரத்துறை நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News