இந்தியா

126 மரங்களை வெட்டி கடத்திய பா.ஜ.க. எம்.பி.யின் சகோதரர் கைது

Published On 2023-12-31 10:31 IST   |   Update On 2023-12-31 10:31:00 IST
  • வருவாய் அதிகாரிகள் சம்மந்தப்பட்ட பகுதிக்கு சென்று ஆய்வு செய்தபோது மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது உறுதியானது.
  • வனப்பாதுகாப்பு சட்டம் மற்றும் மர பாதுகாப்பு சட்டம் அனைத்தையும் மீறி உள்ளார் என்றார்.

பெங்களூர்:

கர்நாடகாவை சேர்ந்தவர் பிரதாப் சிம்ஹா. பா.ஜனதா எம்.பி.யான இவரது சகோதரர் விக்ரம் சிம்ஹா. இவர் கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான வனநிலத்தில் சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் இருந்த 50 முதல் 60 ஆண்டுகள் பழமையான பலகோடி ரூபாய் மதிப்புள்ள 126 மரங்களை வெட்டி கடத்தி விற்றதாக தகவல் தெரியவந்தது.

இதையடுத்து வருவாய் அதிகாரிகள் சம்மந்தப்பட்ட பகுதிக்கு சென்று ஆய்வு செய்தபோது மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது உறுதியானது. இதுபற்றி தெரியவந்ததும் அவர்கள் பெங்களூர் நகர் குற்றப்பிரிவில் புகார் செய்தனர். இதையடுத்து போலீசார் விக்ரம் சிம்ஹா மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு வனத்துறை அதிகாரிகளுக்கு மாற்றப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் அனுமதி பெறாமல் நந்தகொண்டனஹள்ளி கிராமத்தில் மரங்களை வெட்டி கடத்தியதாக வழக்கு பதிவு செய்தனர்.

இதுகுறித்து கர்நாடக வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் காந்த்ரே கூறும்போது, விக்ரம் சிம்ஹா ஹாசன் மாவட்டத்தில் 126 மரங்களை சட்டவிரோதமாக வெட்டி விற்றதாக கைது செய்யப்பட்டு உள்ளார். அவர் வனப்பாதுகாப்பு சட்டம் மற்றும் மர பாதுகாப்பு சட்டம் அனைத்தையும் மீறி உள்ளார் என்றார்.

மரங்கள் வெட்டி கடத்திய வழக்கில் கைதான விக்ரம் சிம்ஹாவின் சகோதரர் பிரதாப் சிம்ஹா கடந்த சில நாட்களுக்கு முன்பு பாராளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்த 2 பேருக்க பார்வையாளர் அனுமதி சீட்டுகளை வழங்கிய புகாரில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News