இந்தியா

வெள்ளத்தில் மூழ்கிய பெங்களூர்-மைசூர் நெடுஞ்சாலை.

கர்நாடகாவில் கனமழை- வெள்ளத்தில் மிதக்கும் சாலைகள்

Published On 2022-08-30 06:14 GMT   |   Update On 2022-08-30 06:14 GMT
  • பெங்களூரில் இருந்து மண்டியாவுக்கு செல்லும் வாகனங்கள் மாகடி சாலை அல்லது பெங்களூர்-ஹாசன் நெடுஞ்சாலைக்கு திருப்பி விடப்பட்டு உள்ளன.
  • மைசூரில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் கனகாபுராவுக்கு சென்று அங்கிருந்து பெங்களூர் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளன.

பெங்களூரு:

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கர்நாடகாவில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, பெங்களூர் நகர், பெங்களூர் புறநகர், உடுப்பி, உத்தரகன்னடா, தட்சிண கன்னடா, கோலார், சிக்மகளூர், ஷிமோகா, ராம்நகர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

தொடர்ந்து பெய்து வரும் மழையால் பல்வேறு பகுதிகளில் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அதிகாரிகள் அனுப்பி வருகின்றனர். பெங்களூர்-மைசூர் நெடுஞ்சாலையின் பல பகுதிகளில் உள்ள சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

நெடுஞ்சாலை மட்டுமல்லாமல் அதையொட்டி சர்வீஸ் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கும்பல்கோடு, பிடாடி, ராம்நகர், சென்னபட்ணா ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகள் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கி விட்டன. இதனால் அந்தப் பகுதியை கடந்து வாகனங்கள் செல்ல முடியாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பெங்களூரில் இருந்து மண்டியாவுக்கு செல்லும் வாகனங்கள் மாகடி சாலை அல்லது பெங்களூர்-ஹாசன் நெடுஞ்சாலைக்கு திருப்பி விடப்பட்டு உள்ளன. மைசூரில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் கனகாபுராவுக்கு சென்று அங்கிருந்து பெங்களூர் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளன.

கனமழை காரணமாக பெங்களூருவின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. தொடர் மழை காரணமாக பெங்களூருவில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.

காலை 8.30 மணி வரை ராமநகரில் இயல்பை விட 1039 சதவீதமும், சாம்ராஜ் நகரில் இயல்பை விட 1689 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது. சாம்ராஜ் நகரில் 7 செமீ மழையும், கொள்ளேகலில் 6 செமீ மழையும் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி இருப்பதாலும் வெள்ளம் அதிகரித்துள்ளது. தொடர் மழையால் கடந்த 3-4 நாட்களில் சுமார் 700 வீடுகள் சேதமடைந்துள்ளன.

ராம்நகர் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் பசவராஜ் பொம்மை பார்வையிட்டார். மேலும் கனமழையால் நகரில் உள்ள பட்ஷி ஏரி உடைப்பு ஏற்பட்டுள்ளதால் ஏற்பட்ட பயிர்கள் சேதம் குறித்து ஆய்வு செய்தார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். பட்ஷி ஏரியின் சீரமைப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Tags:    

Similar News