இந்தியா

பாராளுமன்றத்தில் நாளை ராகுல் காந்தி பேசுவதற்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளது- மல்லிகார்ஜுன கார்கே தகவல்

Published On 2023-03-20 09:11 GMT   |   Update On 2023-03-20 09:11 GMT
  • ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி பா.ஜனதா எம்.பி.க்கள் பாராளுமன்றத்தை தொடர்ந்து முடக்கி வருகிறார்கள்.
  • பாராளுமன்றத்தில் அனுமதி கிடைத்தால் விளக்கம் அளிப்பேன் என்றும் ராகுல் காந்தி தெரிவித்து இருந்தார்.

புதுடெல்லி:

காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இந்திய ஜனநாயகம் அச்சுறுத்தலில் இருப்பதாகவும், இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள் இதில் தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார். இதற்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது.

ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி பா.ஜனதா எம்.பி.க்கள் பாராளுமன்றத்தை தொடர்ந்து முடக்கி வருகிறார்கள்.

அதேநேரத்தில் ராகுல் காந்தி தான் அப்படி பேசவில்லை என்றும், இது தொடர்பாக பாராளுமன்றத்தில் அனுமதி கிடைத்தால் விளக்கம் அளிப்பேன் என்றும் ராகுல் காந்தி தெரிவித்து இருந்தார். காங்கிரஸ் கட்சியும் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க மாட்டார் என்று திட்டவட்டமாக தெரிவித்தது.

இந்த நிலையில் ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் நாளை பேசுவதற்கு நேரம் கேட்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனகார்கே தெரிவித்துள்ளார். பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பு அவர் இதுதொடர்பாக நிருபர்களிடம் கூறியதாவது:-

பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசுவதற்கு நாளை நேரம் கேட்டுள்ளோம். அனுமதி கிடைத்தால் அவர் பேசுவார். ஜனநாயகத்தில் எங்களை பேசக்கூட அனுமதிப்பது இல்லை. இதுதான் பிரச்சினையாகும். மைக்கை அணைத்து விடுவார்கள்.

நாங்கள் எழுப்பும் பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசைதிருப்ப மத்திய அரசு முயற்சிக்கிறது.பாதயாத்திரை முடிந்து 40 நாட்கள் கழித்து இப்போது யாரை சந்தித்தீர்கள் என்று கேட்கிறார்கள். லட்சக்கணக்கான மக்கள் பாதயாத்திரையின் போது ராகுலை சத்தித்தனர்.

எங்களை குறிவைத்து துன்புறுத்துவதற்கான முயற்சி இதுவாகும். எங்களை மிரட்டி பலவீனப்படுத்த விரும்புகிறார்கள். நாங்கள் பயப்படமாட்டோம். பலவீனமும் அடையமாட்டோம்.

இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறி உள்ளார்.

Tags:    

Similar News