இந்தியா

பணம் மோசடி: கேரள சி.பி.ஐ. கட்சியின் முன்னாள் தலைவர் கைது

Published On 2023-11-22 14:40 IST   |   Update On 2023-11-22 14:40:00 IST
  • பாசுரங்கன் சி.பி.ஐ. கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
  • 3-வது முறையாக அவர்கள் இருவரையும் கொச்சியில் உள்ள தங்களின் அலுவலகத்துக்கு அழைத்து விசாரணை நடத்தினர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கண்டாலா சர்வீஸ் கூட்டுறவு வங்கியில் ரூ100 கோடிக்கு மேல் கடன் மோசடி நடந்ததை கேரள கூட்டுறவுத்துறை கண்டறிந்தது. இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்தனர்.

கூட்டுறவு வங்கியில் நடந்த இந்த மோசடி குறித்து குற்றப்பிரிவு போலீசார் மற்றும் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் இந்த மோசடியில் ஏராளமானோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

அது தொடர்பாக கூட்டுறவு வங்கியின் முன்னாள் செயலர்கள் மற்றும் வசூல் ஏஜெண்டுகளின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இந்த மோசடியில் அந்த கூட்டுறவு வங்கியின் தலைவராக இருந்த சி.பி.ஐ. கட்சியின் முன்னாள் தலைவரான பாசுரங்கனுக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.

அவர் கண்டலா சர்வீஸ் கூட்டுறவு வங்கியில் தனது நிலத்தை அடகு வைத்து ரூ3.20கோடிக்கு மேல் கடன் பெற்றுள்ளதும், அவரது மகன் அகில்ஜித் 8 முறைக்கு மேல் ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமாக கடன் வாங்கியுள்ளதும், அவர்கள் இருவரும் அந்த பணத்தை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்ததும் தெரிய வந்தது.

மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டதை தொடர்ந்து பாசுரங்கன் சி.பி.ஐ. கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் பாசுரங்கன் மற்றம் அவரது மகன் ஆகிய 2 பேர் மீதும் வழக்கு பதியப்பட்டது. அவர்கள் இருவரிடமு அமலாக்கத்துறையினர் ஏற்கனவே 2 முறை விசாரணை நடத்தியிருந்தனர்.

இந்நிலையில், 3-வது முறையாக அவர்கள் இருவரையும் கொச்சியில் உள்ள தங்களின் அலுவலகத்துக்கு அழைத்து விசாரணை நடத்தினர். 10 மணி நேரத்திற்கும் மேலாக அவர்கள் இருவரிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

இதையடுத்து பாசுரங்கன் மற்றும் அவரது மகன் அகில்ஜித் ஆகிய இருவரையும் அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். இருவரும் கொடுத்துள்ள வாக்குமூலத்திலும் முரண்பாடுகள் இருப்பதாலும், ஆகவே அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Tags:    

Similar News