இந்தியா

தண்ணீர் பிரச்சினையை தீர்க்க பிள்ளைகள் உதவியுடன் வீட்டில் 34 அடி ஆழ கிணறு தோண்டிய கட்டிட தொழிலாளி

Published On 2023-07-12 05:22 GMT   |   Update On 2023-07-12 05:23 GMT
  • பாபுராஜின் பிள்ளைகள் பள்ளி படித்து வரும் மாணவ-மாணவிகள் என்பதால் மண் அள்ளுதல் உள்ளிட்ட சிறு சிறு வேலைகளை தந்தைக்கு உதவினர்.
  • கிணற்றில் இருந்தே தண்ணீர் எடுத்து பாபுராஜின் குடும்பத்தினர் தங்களின் தேவைக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் பாலக்காட்டையை சேர்ந்தவர் பாபுராஜ். கட்டிட தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்களது வீடு உள்ள பகுதியை சேர்ந்தவர்கள், அங்குள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்தே தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர்.

கடந்த 5 ஆண்டுகளாக பாபுராஜின் குடும்பத்தினர் அங்கிருந்தே தண்ணீர் எடுத்தனர். இந்நிலையில் அந்த ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் பாபு ராஜின் குடும்பத்தினரின் தேவைக்கு தண்ணீர் கிடைக்கவில்லை.

இதனால் என்ன செய்வதென்று தவித்த அவர்கள் தங்களது வீட்டு வளாகத்தில், தாங்களாகவே கிணறு தோண்ட முடிவு செய்தனர். அதன்படி, பாபுராஜ் அந்த பணியை தொடங்கினார். அவருக்கு கிணறு தோண்ட அவருடைய மகன் சிவாஜித், மகள் சிவான்யா ஆகியோர் உதவி செய்தனர்.

தினமும் வேலைக்கு சென்று விட்டு மாலையில் சீக்கிரமாக வீட்டிற்கு பாபு ராஜ் வந்து விடுவார். பின்பு தனது பிள்ளைகளுடன் சேர்ந்து கிணறு தோண்டும் பணியில் இரவு வரை ஈடுபடுவார். பாபுராஜின் பிள்ளைகள் பள்ளி படித்து வரும் மாணவ-மாணவிகள் என்பதால் மண் அள்ளுதல் உள்ளிட்ட சிறு சிறு வேலைகளை தந்தைக்கு உதவினர்.

இதனால் 9 அடி விட்டத்தில் 34 அடி ஆழ கிணற்றை 50 நாட்களில் தோண்டி முடித்தனர். 30 அடி ஆழம் தோண்டி முடிந்தபோது பாறைகள் இருந்ததால் பாபுராஜ் என்ன செய்வ தென்று திகைத்தார். பின்பு பாறை உடைக்கும் எந்திரத்தை வாடகைக்ககு வாங்கி உடைத்தார். 4 அடி வரை பாறையை உடைத்து எடுத்ததும் தண்ணீர் வந்தது.

இதையடுத்து கிணறு தோண்டும் பணியை நிறுத்தினர். கிணற்றில் தண்ணீர் நிரம்பத் தொடங்கியது. அதன் பிறகு அவர்களாகவே கிணற்றுக்கு தடுப்புச் சுவர் நேர்த்தியாக கட்டி முடித்தனர். தற்போது அந்த கிணற்றில் இருந்தே தண்ணீர் எடுத்து பாபுராஜின் குடும்பத்தினர் தங்களின் தேவைக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News