இந்தியா

சித்தூர் அருகே பேட்டரி தொழிற்சாலையில் தீ விபத்து

Published On 2023-01-31 10:47 IST   |   Update On 2023-01-31 10:47:00 IST
  • தொழிற்சாலையில் இருந்த ஊழியர்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், சித்தூர் புறநகர் பகுதியான சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி யாதமரி என்ற இடத்தில் தனியார் பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான கல்லா அருணகுமாரிக்கு சொந்தமான இந்த தொழிற்சாலையில் 3000-த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 3 ஷிப்ட் முறையில் வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் டியூப்ளர் பேட்டரி தயாரிக்கும் பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனைக் கண்ட தொழிலாளர்கள் அங்கிருந்த தீயணைப்பான்கள் மூலம் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களது முயற்சி பலனளிக்காததால் தீ வேகமாக பற்றி எரிய தொடங்கியது.

தொழிற்சாலையில் இருந்த ஊழியர்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து சித்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் பெத்தி ரெட்டி தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்த 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை கட்டுப்படுத்த முயன்றனர். சித்தூர் டிஎஸ்பி சீனிவாச மூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அதற்குள் தொழிற்சாலை முழுவதும் தீப்பற்றி எரிந்தது. அங்கிருந்த பேட்டரிகள் வெடித்து சிதறின. விண்ணை தொடும் அளவிற்கு புகை கிளம்பியதால் நள்ளிரவு வரை தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது. பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்கள் யாருக்கும் காயமோ உயிர் சேதமோ ஏற்படவில்லை. பல கோடி மதிப்பிலான எந்திரங்கள் மற்றும் பேட்டரிகள் எரிந்து நாசமானதாக தெரிவித்தார்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தொழிற்சாலையில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்தது தெரிய வந்துள்ளது. மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News