இந்தியா

மணிப்பூரில் மீண்டும் கலவரம்- துப்பாக்கி சண்டையில் 9 பேர் பலி

Published On 2023-06-14 13:11 IST   |   Update On 2023-06-14 13:11:00 IST
  • காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக இம்பாலுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
  • கொல்லப்பட்டவர்களில் சிலரின் உடலில் வெட்டுக்காயங்கள் மற்றும் பல தோட்டாக்கள் காயம் உள்ளது.

இம்பால்:

மணிப்பூர் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனர். இதற்கு குதி மற்றும் நாகா பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

இதனால் இரு சமூகத்தினர் இடையே கடந்த மாதம் தொடக்கத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டது. 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ஏராளமான வீடுகளும், வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. 40 ஆயிரம் பேர் தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அங்கு 4 நாட்கள் சென்று ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 6 வழக்கு சி.பி.ஐ. விசாரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழுவால் அமைக்கப்பட்டது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்களும் குவிக்கப்பட்டனர்.

அப்படி இருந்தும் மணிப்பூரில் அமைதி நிலவாமல் தொடர்ந்து கலவரம் நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தாய், 9 வயது மகன் உள்ளிட்ட 3 பேர் உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் மணிப்பூரில் நேற்று முதல் மீண்டும் கலவரம் வெடித்தது.

கடந்த 24 மணி நேரத்தில் நடந்த வன்முறை சம்பவங்களில் பெண் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.

இம்பால் கிழக்கு மற்றும் காங்போசி மாவட்டங்களுக்கு இடையே உள்ள காமன்லோக் பகுதியில் நேற்று இரவு 10 முதல் 10.30 மணி வரை கும்பல்கள் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. மேலும் ஆயுதங்களாலும் மோதிக் கொண்டனர்.

இந்த துப்பாக்கி சண்டை மற்றும் வன்முறையில் பெண் உள்பட 9 பேர் பலியானார்கள். 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக இம்பாலுக்கு கொண்டு செல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் சிலரின் உடலில் வெட்டுக்காயங்கள் மற்றும் பல தோட்டாக்கள் காயம் உள்ளது.

மீண்டும் கலவரம் நடந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபட்டவர்களை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News