இந்தியா
கொண்டாட்டத்தில் துவாரகா தாஸ் மற்றும் குடும்பத்தினர்.

ஒரே நாளில் கோடீஸ்வரரான தொழிலாளி- 88 வயது பஞ்சாப் முதியவருக்கு லாட்டரியில் ரூ.5 கோடி பரிசு

Published On 2023-01-20 09:51 IST   |   Update On 2023-01-20 13:32:00 IST
  • 88 வயதான முதியவர் மகா சங்கராந்தியையொட்டி நடந்த பம்பர் குலுக்கலில் லாட்டரி வாங்கி உள்ளார்.
  • லாட்டரியில் முதியவருக்கு ரூ. 5 கோடி பரிசு விழுந்துள்ளது.

சண்டிகர்:

சாதாரண தொழிலாளி ஒரே நாளில் கோடீஸ்வரராக மாறுவது எல்லாம் சினிமாவில் மட்டும் தான் நடக்கும் என்பதில்லை.

அதிர்ஷ்டம் இருந்தால் நிஜ வாழ்க்கையிலும் நடக்கலாம் என்பது போன்ற சம்பவம் 88 வயது முதியவருக்கு நடந்துள்ளது. பஞ்சாப் மாநிலம் மொகாலி மாவட்டத்தில் உள்ள தேராபஸ்ஸி பகுதியை சேர்ந்தவர் துவாரகா தாஸ்.

88 வயதான இவர் மகா சங்கராந்தியையொட்டி நடந்த பம்பர் குலுக்கலில் லாட்டரி வாங்கி உள்ளார். இதில் அவருக்கு ரூ. 5 கோடி பரிசு விழுந்துள்ளது.

இவர் ஜிராக்பூரில் இருந்து லாட்டரி சீட்டை வாங்கி உள்ளார். பரிசு தொகையில் வரி பிடித்தம் போக ரூ.3.5 கோடி அவருக்கு கிடைக்கும்.

அவருக்கு பரிசு சீட்டை விற்ற லோகேஷ் என்பவர் கூறுகையில், துவாரகா தாசின் பேரன் நிகில் ஷர்மா என்னிடம் வந்து அவருடைய தாத்தா குறிப்பிட்ட இலக்கங்களை கொண்ட லாட்டரி சீட்டை கேட்டதாக கூறினார். அதன்படி அந்த டிக்கெட்டை கொடுத்தேன்.

தற்போது அந்த டிக்கெட்டுக்கு மெகா பம்பர் பரிசு கிடைத்துள்ளது. அவருக்கு லாட்டரி சீட்டை விற்றதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

துவாரகா தாஸ் 1947-ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப்புக்கு குடி பெயர்ந்தவர். அப்போது அவருக்கு வயது 13. பரிசு கிடைத்தது குறித்து அவர் கூறியதாவது:-

ஒரு நாள் பம்பர் பரிசு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நான் ஒவ்வொரு மாதமும் லாட்டரி சீட்டுகளை வாங்கினேன். அந்த பணத்தை இப்போது என் குடும்பத்தினர் நல்ல முறையில் பயன்படுத்துவார்கள். நான் என் வாழ்நாள் முழுவதும் நிறைய வேலை செய்தேன். ஆனால் எந்த தவறும் செய்யவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

தொழிலாளிக்கு கிடைத்த மெகா பம்பர் பரிசால் அந்த பகுதியில் கொண்டாட்டங்கள் நடந்தன. அப்போது துவாரகா தாசின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆடிப்பாடி கொண்டாடினர்.

Tags:    

Similar News