7-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: 62.36% வாக்குகள் பதிவு
- நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
- ஜார்கண்டில் 5 மணிக்கே வாக்குப்பதிவு முடிக்கப்பட்டது.
543 தொகுதிகளை கொண்ட இந்திய பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது. கடந்த 2½ மாதங்களுக்கு மேலாக நடந்து வந்த இந்த தேர்தலில் ஏற்கனவே 6 கட்ட தேர்தல்கள் நிறைவு பெற்றிருந்தது.
இதில் 485 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. மேலும் குஜராத்தின் சூரத் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் போட்டியின்றி தேர்வாகி இருந்தார்.
இதைத்தொடர்ந்து 7-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நேற்று நடந்தது. இதில் மீதமுள்ள 57 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடந்தது.
அந்தவகையில் பஞ்சாப் (13 தொகுதிகள்), உத்தரபிரதேசம் (13), மேற்கு வங்காளம் (9), பீகார் (8), ஒடிசா (6), இமாசல பிரதேசம் (4), ஜார்கண்ட் (3) மற்றும் சண்டிகார் (1) என 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் இந்த தேர்தல் நடந்தது.
நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. அதேநேரம் ஜார்கண்டில் 5 மணிக்கே வாக்குப்பதிவு முடிக்கப்பட்டது.
இந்நிலையில், 7ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 62.36 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.