இந்தியா

கிருஷ்ணா நதி வெள்ளத்தில் மணல் எடுக்க தோண்டிய பள்ளத்தில் சிக்கி 5 மாணவர்கள் பலி

Published On 2022-12-18 10:52 IST   |   Update On 2022-12-18 10:52:00 IST
  • ஆற்றின் கரையோரம் குளித்துக் கொண்டிருந்த தோட்ட சுரேஷ் திடீரென மணல் அள்ள தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கி தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடினார்.
  • ஒரே பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் 5 பேர் ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம், யானை மலைக்கு குடு பகுதியை சேர்ந்தவர்கள் தோட்ட சுரேஷ் (வயது 15), குணசேகர் (14), பாஜி (14), உசேன் (14), பாலு (17). பள்ளி கல்லூரி மாணவர்களான 5 பேரும் கிருஷ்ணா நதியில் குளிப்பதற்காக சென்றனர்.

ஆற்றில் மணல் அள்ளப்பட்டு இருந்ததால் ஆங்காங்கே பெரிய பெரிய பள்ளங்கள் இருந்தது. தற்போது அதிக அளவில் தண்ணீர் சென்று கொண்டு இருப்பதால் ஆற்றில் இருந்த பள்ளங்கள் தெரியவில்லை.

இந்த நிலையில் ஆற்றின் கரையோரம் குளித்துக் கொண்டிருந்த தோட்ட சுரேஷ் திடீரென மணல் அள்ள தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கி தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடினார்.

இதனை கண்ட சக நண்பர்கள் தோட்ட சுரேஷை காப்பாற்றுவதற்காக சென்றபோது நீச்சல் தெரியாமல் அவர்களும் தண்ணீரில் மூழ்கி அபய குரல் எழுப்பினர். அங்கிருந்தவர்கள் தண்ணீரில் மூழ்கியவர்களை காப்பாற்ற முயற்சி செய்தனர்.

ஆனால் அவர்களை காப்பாற்ற முடியவில்லை. 5 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதில் தோட்ட சுரேஷ், குணசேகர் ஆகிய 2 பேர் உடலையும் பொதுமக்கள் மீட்டனர்.

அதற்குள் இரவு நேரம் ஆகிவிட்டதால் மற்றவர்கள் உடல்களை மீட்க முடியவில்லை. இதையடுத்து தேசிய பேரிடர் மீட்பு படையே சேர்ந்த 18 வீரர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுடன் சேர்ந்து உள்ளூர் மீனவர்களும் ஆற்றில் மூழ்கியவர்களை தேடும் பணி நடந்தது.

நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு மாணவர்கள் தண்ணீரில் மூழ்கிய இடத்தில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் பாலு, பாஜி, உசேன் ஆகிய 3 பேரின் பிணங்களை மீட்டனர்.

மீட்கப்பட்ட மாணவர்களின் உடலை பார்த்து அவரது பெற்றோர், உறவினர்கள் கதறி அழுத சம்பவம் காண்போரின் கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

ஒரே பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் 5 பேர் ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News