இந்தியா

கோப்பு படம்.

திருச்சூர் அருகே அணையில் படகு கவிழ்ந்து 3 வாலிபர்கள் பலி

Published On 2023-09-06 04:01 GMT   |   Update On 2023-09-06 04:01 GMT
  • மீட்பு பணிகளை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணதேஜா நேரில் சென்று பார்வையிட்டார்.
  • 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ளது பீச்சி அணை. இந்த அணை திருச்சூர் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு பாசனம் மற்றும் திருச்சூர் நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இந்த அணையில் பயணம் செய்ய பைபர் படகுகள் உள்ளன.

இந்நிலையில் சம்பவத்தன்று வாணியம்பாறை அருகே உள்ள கொட்டிச்சேரிக்குடி பகுதியை சேர்ந்த பால்சன் மகன் விபின்(26), ஹனீபா என்பவரின் மகன் நவுசாத்(29), ஆறுமுகன் என்பவரின் மகன் அஜித்(21), கொள்ளிக்காடு மணியங்கிணறு காலனியை சேர்ந்த சிவபிரசாத்(23) ஆகிய 3 பேரும் பீச்சி அணைக்கு சென்றனர்.

அவர்கள் அங்கிருந்த பைபர் படகில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது அவர்களது படகு அணையில் திடீரென கவிழ்ந்தது. படகில் இருந்த 4 பேரும் அணைக்குள் விழுந்து தத்தளித்தனர். அவர்களில் விபின், நவுசாத், அஜத் ஆகிய 3 பேரும் அணையில் மூழ்கினர்.

சிவபிரசாத் மட்டும் நீந்தி கரைக்கு வந்துவிட்டார். படகு கவிழ்ந்த சம்பவம் குறித்து அங்கிருந்தவர்களிடம் அவர் தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு பீச்சி போலீசாரும், திருச்சூர் தீயணைப்பு வீரர்களும் சென்றனர். அணையில் மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

பின்பு இரவு ஆகி விட்டதால் மறுநாள் தேடுதல் பணி தொடங்கப்பட்டது. மீட்பு பணிகளை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணதேஜா நேரில் சென்று பார்வையிட்டார். இந்நிலையில் அணையில் மூழ்கிய 3 வாலிபர்களும் அடுத்தடுத்து பிணமாக மீட்கப்பட்டனர். 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டது.

அணையில் படகு கவிழ்ந்து 3 வாலிபர்கள் இறந்த சம்பவம் திருச்சூர் பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News