குஜராத்தில் கார் மோதி 10 பேர் சாவு: விபத்தை வேடிக்கை பார்க்க திரண்டிருந்தவர்கள் மீது 160 கி.மீ. வேகத்தில் வந்து புகுந்ததால் பரிதாபம்
- இன்று அதிகாலை ஒரு லாரியும், ஜீப்பும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன
- வழியாக வந்த சொகுசு கார் விபத்தை பார்க்க கூடி நின்ற மக்கள் கூட்டத்தில் புகுந்தது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்- காந்திநகர் தேசிய நெடுஞ்சாலையில் இஸ்கான் பாலம் உள்ளது. இந்த பாலத்தில் இன்று அதிகாலை ஒரு லாரியும், ஜீப்பும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனால் வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் சிலரும் போலீசாருக்கு உதவியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடத்தில் ஏராளமானோர் கூடிநின்றனர். இந்த வேளையில் அந்த வழியாக வந்த சொகுசு கார் விபத்தை பார்க்க கூடி நின்ற மக்கள் கூட்டத்தில் புகுந்தது. இந்த விபத்தில் போலீஸ்காரர், ஊர்க்காவல்படை வீரர் உள்பட 10 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். 13 பேர் பலத்த காயம் அடைந்தனர். உடனே அருகில் நின்ற போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த கொடூர விபத்தில் பலர் 20 முதல் 25 அடி தூரம் வரை தூக்கி வீசப்பட்டனர். விபத்தில் சிக்கிய காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்தில் இறந்தவர்கள் பொடாட், சுரேந்திர நகர் பகுதியை சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
காயம் அடைந்தவர்களில் சிலரது உடநிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். காயம் அடைந்தவர்களுக்கு சோலா சிவில் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து காட்சிகள் சமூக வலதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்க குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேல் உத்தரவிட்டு உள்ளார்.