இந்தியா

குடும்பம் நடத்த வராததால் தூங்கிய மனைவியை தீவைத்து எரித்த கணவன்: 5 பேர் உயிருடன் கருகி பலி

Published On 2022-10-19 08:03 IST   |   Update On 2022-10-19 08:03:00 IST
  • மனைவி, 2 குழந்தைகள் மற்றும் அவரது பெற்றோர் உயிரிழந்தனர்.
  • போலீசார் தப்பி ஓடிய குல்தீப்சிங் மற்றும் கூட்டாளிகளை தேடி வருகிறார்கள்.

சண்டிகார்

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் பரம்ஜித் கவுர் என்ற இளம்பெண், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனது 2 குழந்தைகளுடன், பெற்றோர் வீட்டில் கடந்த 6 மாத காலமாக வசித்து வந்தார். அவரது கணவர் குல்தீப் சிங் (வயது 30), மனைவியை வீடு திரும்பி குடும்பம் நடத்த வருமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.

'தன்னையும், குழந்தைகளையும் அடிக்கடி அடித்து துன்புறுத்தும் உங்களுடன் வாழ முடியாது' என்று கூறி பரம்ஜித் கவுர், கணவரின் கோரிக்கையை ஏற்காமல் நிராகரித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் குல்தீப், 2 பேருடன் சேர்ந்து பரம்ஜித் கவுர் வசித்த வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது மனைவி மற்றும் குழந்தைகள் உள்பட அனைவரும் தூங்கிக்கொண்டு இருந்துள்ளனர். அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த அவர்கள் மீது 3 பேரும் சேர்ந்து பெட்ரோல் ஊற்றி தீவைத்துள்ளனர். இதில் உறங்கிய நிலையிலேயே நெருப்பில் சிக்கிய பரம்ஜித் கவுர் அவரது தந்தை சர்ஜான் சிங், தாய் ஜோகிந்தேரா மற்றும் அவரது குழந்தைகள் 2 பேர் என அனைவரும் உயிருடன் கருகி இறந்தனர்.

இந்த சம்பவம் குறித்து நேற்று போலீசாருக்கு தகவல் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய குல்தீப்சிங் மற்றும் கூட்டாளிகளை தேடி வருகிறார்கள்.

Similar News