இந்தியா

ஆபாசமாக உடையணிவதே பாலியல் சீண்டலுக்கு காரணம்: நீதிபதியின் கருத்துக்கு மகளிர் அமைப்புகள் கண்டனம்

Published On 2022-08-18 12:28 GMT   |   Update On 2022-08-18 12:43 GMT
  • இந்திய வழக்கறிஞர்கள் சங்கம், கேரள மகளிர் ஆணையம் கண்டித்து கருத்து பதிவிட்டது.
  • பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை சாதாரணமாக எடுத்து கொள்ளக்கூடாது

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் சிவிக் சந்திரன் (வயது 74). பிரபல எழுத்தாளர். இவர் மீது பெண் எழுத்தாளர் ஒருவர் கோழிக்கோடு போலீசில் பாலியல் புகார் கொடுத்தார். அதில் கோழிக்கோடு கடற்கரையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது தன்னிடம் சிவிக் சந்திரன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறியிருந்தார்.

இது தொடர்பாக கோழிக்கோடு போலீசார் சிவிக் சந்திரன் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சிவிக் சந்திரன் கோழிக்கோடு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த கோழிக்கோடு கோர்ட்டு, சிவிக் சந்திரனுக்கு முன்ஜாமீன் வழங்கியது. இது தொடர்பான உத்தரவில், நிகழ்ச்சிக்கு வந்த புகார்தாரர் மிகவும் ஆபாசமாகவும், கவர்ச்சியாகவும் உடை அணிந்து வந்துள்ளார்.

பெண்கள் ஆபாசமாக உடை அணிவது பாலியல் சீண்டலுக்கு காரணமாக அமையும், என்று நீதிபதி கூறியிருந்தார்.

கோழிக்கோடு கோர்ட்டு நீதிபதியின் இந்த கருத்துக்கு பல்வேறு மகளிர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. இந்திய வழக்கறிஞர்கள் சங்கம், கேரள மகளிர் ஆணையமும் இதனை கண்டித்து கருத்து பதிவிட்டது.

இந்த நிலையில் டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவாலும் நீதிபதியின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை சாதாரணமாக எடுத்து கொள்ளக்கூடாது. அவர்கள் உடை அணிவதை வைத்து தீர்மானிப்பது சரியல்ல.

டெல்லியில் கவுன் அணிந்திருந்த 8 மாத குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அப்படியானால் அந்த குழந்தையின் உடை பாலியல் சீண்டலுக்கு காரணம் என்று கூறமுடியுமா?

எனவே இந்த விவகாரம் தொடர்பாக கேரள ஐகோர்ட்டு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News