அரசு பள்ளிகளில் தினமும் கூடுதல் வகுப்பு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
- விடுமுறை நாட்களில் ஆசிரியர்கள் கணக்கெடுப்பில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
- தொடர் விடுமுறையால் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு குறித்த நேரத்தில் வகுப்புகளை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் சார்பில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் பணிகள் நடந்து வருகிறது. இந்த கணக்கெடுப்பு பணிகளுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
தசரா விடுமுறையின் போது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் பணிகளை முடிக்க ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால் கணக்கெடுப்பு பணிகள் நிறைவு பெறாத காரணத்தால், கடந்த மாதம் (அக்டோபர்) 7-ந் தேதியில் இருந்து 18-ந் தேதி வரை பள்ளிக்கூடங்களுக்கு தொடர் விடுமுறை வழங்கப்பட்டு இருந்தது.
அந்த விடுமுறை நாட்களில் ஆசிரியர்கள் கணக்கெடுப்பில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். இந்த நிலையில், தொடர் விடுமுறையால் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு குறித்த நேரத்தில் வகுப்புகளை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு நேற்று முதல் வருகிற ஜனவரி மாதம் 24-ந் தேதி வரை தினமும் ஒரு வகுப்பு கூடுதலாக நடத்தும்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, பள்ளி கல்வித்துறை அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜனவரி மாதம் 24-ந் தேதிக்குள் தினமும் கூடுதலாக ஒரு வகுப்புகளை நடத்தி பாடத்திட்டங்களை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும்படி ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.