VVPAT ரசீதை 100% எண்ணுவதற்கு உத்தரவிடக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
- யாருக்கு வாக்களித்தோம் என்பதை VVPAT ரசீது மூலம் தெரிந்து கொள்ளலாம்.
- இந்த ரீசிது அனைத்தும் எண்ணப்பட்டு EVMs-ல் பதிவான வாக்குகளுடன் சரியாக உள்ளதா? என சரிபார்க்க வேண்டும் என கோரிக்கை.
இந்தியாவில் நடைபெறும் பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களில் வாக்காளர்கள் வாக்களிக்க EVMs பயன்படுத்தப்படுகிறது. இந்த வாக்கு எந்திரத்துடன் VVPAT பொருத்தப்பட்டிருக்கும். வாக்காளர் வாக்களித்த பின்னர், யாருக்கு வாக்களித்தோம் என்பதை VVPAT இயந்திரத்தில் தோன்றும் ரசீது மூலம் தெரிந்து கொள்ளலாம். பின்னர் VVPAT ரசீது ஒரு பெட்டியில் பாதுகாக்கப்படும். இது வாக்காளர்களுக்க வழங்கப்படமாட்டாது.
பதிவான வாக்குகளில் ஏதாவது சந்தேகம் இருந்தால், சுழற்சி அடிப்படையில் குறிப்பிட்ட வாக்கு மையத்தில் உள்ள VVPAT ரசீதுகள் எண்ணப்படும்.
ஆனால் 100 சதவீதம் VVPAT ரசீதுகள் எண்ணப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன. ஆனால் தேர்தல் ஆணையம் இதற்கு மறுப்பு தெரிவித்தது. இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அப்போது 100 சதவீதம் எண்ணப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.
இதை எதிர்த்து ஹன்ஸ் ராஜ் ஜெயின் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜீவ் கன்னா, சஞ்சய் குமார், கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தலையிட சிறந்த காரணம் எதையும் நாங்கள் காணவில்லை. அதனால் இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்" என நீதிபதிகள் தெரிவித்தனர். EVMs பாதுகாப்பானது, எளிமையானது, பயனருக்கு ஏற்றவகையிலானது எனவும் தெரிவித்துள்ளனர்.