சபரிமலையில் மண்டல பூஜையை முன்னிட்டு சுவாமிக்கு நாளை தங்க அங்கி அணிவித்து வழிபாடு- பக்தர்கள் வருகை அதிகரிப்பு
- கடந்த 38 நாட்களில் 26 லட்சத்து 476 பக்தர்கள் தரிசனம் பெற்றுள்ளனர்.
- மண்டல பூஜையை முன்னிட்டு நாளை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை வழிபாடு நடக்கிறது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக கடந்த மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டது.
இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாததால் நடை திறந்த நாள் முதல் பக்தர்கள் அதிக அளவில் வரத் தொடங்கினர். ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு மூலம் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி என்ற நிலையிலும் பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரிக்கவே செய்தது.
இதனால் பக்தர்கள் தரிசனத்திற்காக நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் நிலவியது. இதனை தொடர்ந்து தரிசன நேரத்தை அதிகரித்து தேவசம்போர்டு உத்தரவிட்டது. ஆனாலும் காத்திருப்பு தொடரவே செய்தது. இதனை தொடர்ந்து குழந்தைகள், பெண்கள், முதியவர்களுக்கு தனி வரிசை ஏற்படுத்த கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த முறை அமல்படுத்தப்பட்டது. இதனால் பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்ய முடிந்தது. காத்திருப்பு நேரமும் குறைந்துள்ளதாக பக்தர்கள் தெரிவித்தனர். கடந்த 38 நாட்களில் 26 லட்சத்து 476 பக்தர்கள் தரிசனம் பெற்றுள்ளனர்.
முக்கிய திருவிழாவான மண்டல பூஜை, நாளை மறுநாள் (27-ந் தேதி) நடைபெற உள்ளது. அன்றைய தினம் தரிசனத்திற்கு அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மண்டல பூஜையை முன்னிட்டு நாளை (26-ந் தேதி) ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை வழிபாடு நடக்கிறது. இதனை காண பக்தர்கள் இன்றே சபரிமலையில் குவிந்து வருகிறார்கள்.