மண்டல பூஜை, மகர விளக்கு ஜோதிக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது
- நாளைமுதல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜை, வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறும்.
- மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் பிற்பகல் 3 மணிக்கு நடை திறக்கப்படும்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு 60 நாட்கள் நடை திறந்து சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி மாலை அணியும் ஐயப்ப பக்தர்கள் விரதத்தை கடைபிடிப்பார்கள். பிறகு இருமுடி கட்டியபடி சபரிமலைக்கு வந்து ஐயப்பனை பயபக்தியுடன் தரிசனம் செய்வார்கள்.
அந்த வகையில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. பக்தர்கள் சரண கோஷங்கள் முழங்க தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார்.
நாளைமுதல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜை, வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறும். கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் புதிய மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி தலைமையில் தினசரி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், தொடர்ந்து காலை 11.30 மணி வரை நெய் அபிஷேகம், உச்ச பூஜைக்கு பிறகு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும்.
மீண்டும் பிற்பகல் 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு மாலை 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனையும், இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகமும் நடைபெறும். அத்தாள பூஜைக்கு பிறகு இரவு 11 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும்.
நடப்பு சீசனையொட்டி அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14-ந் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறும்.