இந்தியா

வேறு பெண்ணை மணந்ததால் தகராறு செய்த காதலியை கொன்று சாக்கடையில் வீசிய காதலன்

Published On 2025-08-31 12:17 IST   |   Update On 2025-08-31 12:17:00 IST
  • துர்வாஸ் தர்ஷன்பாட்டீல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
  • ஆவேசமடைந்த துர்வாஸ் தர்ஷன் பாட்டீல் தனது காதலியை அடித்து கொலை செய்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரி பகுதியை சேர்ந்த பெண் பக்தி ஜிதேந்திர மாயேகர் (வயது 26).

இவர் கடந்த 17-ந் தேதி நண்பர் ஒருவரை சந்திக்க செல்வதாக கூறி வீட்டில் இருந்து வெளியே சென்றார். வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த பெண்ணின் குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். மாயேகரின் தோழிகளிடம் விசாரித்தும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாயேகரின் குடும்பத்தினர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். மாயேகரின் செல்போன் சிக்னல் மூலம் நடத்தப்பட்ட விசாரணையில் அது கண்டாலா பகுதியை காட்டியது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் துர்வாஸ் தர்ஷன்பாட்டீல் என்பவரை மாயேகர் காதலித்து வந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் துர்வாஸ் தர்ஷன்பாட்டீலை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர் பக்தி ஜிதேந்திர மாயேகரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். துர்வாஸ் தர்ஷன்பாட்டீலும், பக்தி ஜிதேந்திர மாயேகரும் ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் திடீரென அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு துர்வாஸ் தர்ஷன்பாட்டீல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

இதையறிந்த பக்தி ஜிதேந்திர மாயேகர் ஆத்திரமடைந்துள்ளார். சம்பவத்தன்று அவர் இதுதொடர்பாக காதலன் துர்வாஸ் தர்ஷன்பாட்டீலுடன் தகராறு செய்துள்ளார்.

அப்போது ஆவேசமடைந்த துர்வாஸ் தர்ஷன் பாட்டீல் தனது காதலியை அடித்து கொலை செய்துள்ளார்.

பின்னர் தனது கூட்டாளிகளான விஸ்வாஸ் விஜய் பவார், சுசாந்த் சாந்தாராம் நரால்கர் ஆகியோருடன் சேர்ந்து பக்தி ஜிதேந்திர மாயேகர் உடலை அம்பாகாட் பகுதியில் உள்ள சாக்கடையில் வீசியதாக கூறினார்.

இதைத்தொடர்ந்து அம்பாகாட் பகுதிக்கு சென்ற போலீசார் பக்தி ஜிதேந்திர மாயேகரின் உடலை கைப்பற்றினர்.

மேலும் அவரது காதலன் துர்வாஸ் தர்ஷன்பாட்டீல் மற்றும் கூட்டாளிகளான விஸ்வாஸ் விஜய் பவார், சுசாந்த் சாந்தாராம் நரால்கர் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News