இந்தியா
போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு ராக்கி கயிறு கட்டிய பெண் போலீசார்
- போக்குவரத்து விதிகளை மீறிய ஆண்களை மடக்கிப்பிடித்து ராக்கி கயிறு கட்டினார்கள்.
- அபராதத்தை போக்குவரத்தை கவனிக்கும் ஆண் போலீசார் விதித்தனர்.
புதுடெல்லி:
வடமாநிலங்களில் நேற்று ரக்ஷா பந்தன் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது.
தலைநகர் டெல்லியில் இந்த பண்டிகையை முன்னிட்டும் பணிக்கு வந்திருந்த பெண் போலீசார் சாலைகளில் ஒரு நூதனத்தை கடைப்பிடித்தனர்.
ஹெல்மெட் அணியாமல் இருத்தல், சிக்னல் தாண்டுதல் போன்ற போக்குவரத்து விதிகளை மீறிய ஆண்களை மடக்கிப்பிடித்து ராக்கி கயிறு கட்டினார்கள். அவர்களது கையில் சுதந்திர தினத்தை நினைவுப்படுத்தி தேசியக்கொடியையும் வழங்கினர். இப்படியெல்லாம் செய்ததால் அவர்களுக்கு அபராதம் கிடையாது என்றில்லை. அபராதமும் விதிக்கப்பட்டது. ஆனால் அதனை, போக்குவரத்தை கவனிக்கும் ஆண் போலீசார் விதித்தனர்.
போலீசாரின் இந்த நடவடிக்கை டெல்லி சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக இருந்தது.