இந்தியா

அசோக் கெலாட்டுக்கு எதிராக ராஜஸ்தானில் சச்சின் பைலட் உண்ணாவிரதம்

Published On 2023-04-11 06:58 GMT   |   Update On 2023-04-11 06:58 GMT
  • ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.
  • ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இவருக்கும் காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான சச்சின் பைலட்டுக்கும் இடையே நீண்ட நாட்களாக பனிப்போர் நிலவி வருகிறது. அவ்வப்போது அவர்களுக்குள் மோதல் ஏற்படுவது உண்டு. அப்போது எல்லாம் கட்சி மேலிடம் இருவரையும் சமரசம் செய்து வைத்து வருகிறது.

இந்த மோதலின் உச்சகட்டமாக அசோக் கெலாட் அரசுக்கு எதிராக சச்சின் பைலட் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்தார். முந்தைய வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சியில் நடந்த ஊழல்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க தற்போதைய அரசு தவறி விட்டது என்றும் 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதியை பூர்த்தி செய்ய வேண்டியது காங்கிரசின் கடமை என்றும் கூறி இந்த போராட்டத்தில் ஈடுபட போவதாக சச்சின் பைலட் தெரிவித்தார்.

அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் கட்சி மேலிடம் எடுத்த முயற்சிக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.

தான் அறிவித்தபடி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று சச்சின் பைலட் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தார். இந்த போராட்டத்தில் அவரது ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக அக்கட்சியை சேர்ந்த மூத்ததலைவர் போராட்டத்தில் குதித்து உள்ளது காங்கிரசுக்கு பெரும் தலைவலியை கொடுத்து உள்ளது.

Tags:    

Similar News