இந்தியா

என் பாட்டி, தந்தை கொல்லப்பட்டாலும் யாரிடமும் வெறுப்புணர்வை காட்டியதில்லை- ராகுல் காந்தி

Published On 2022-11-26 19:28 GMT   |   Update On 2022-11-27 01:29 GMT
  • நான் வெறுப்பை வளர்க்கவில்லை, என் இதயத்தில் காதல் மட்டுமே மலர்ந்தது.
  • உங்கள் இதயத்தில் உள்ள பயத்தைப் போக்குங்கள், வெறுப்பு மறைந்து விடும்.

காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெறுகிறது. அம்பேத்கரின் பிறந்த இடமான மோவ்வில் உள்ள அவரது உருவ சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் பேசிய ராகுல்காந்தி கூறியுள்ளதாவது:


 அம்பேத்கர், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்ட பெரிய ஆளுமைகள் நமக்கு அரசியலமைப்பை வழங்கினர். நமது அரசியலமைப்பு அனைவருக்கும் சம உரிமைகளை வழங்கி உள்ளது. மாநிலங்களவை, நீதித்துறை மற்றும் நாட்டின் அதிகார அமைப்புகள், அரசியலமைப்பிலிருந்து தோன்றியவை.

அரசியலமைப்பு என்பது வெறும் புத்தகம் அல்ல, ஒரு வாழும் சக்தி, ஒரு சிந்தனை. அந்த எண்ணத்தை ஆர்.எஸ்.எஸ் அழிக்க விரும்புகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு பல ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்.அதன் அலுவலகங்களில் மூவர்ணக் கொடியை ஏற்றாததற்காக, அதன் எதிர்ப்பாளர்களால் விமர்சிக்கப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவும் அரசியல் அமைப்பு சட்டத்தை வெளிப்படையாக அழிக்க முடியாது. அவர்களுக்கு அந்த தைரியம் கிடையாது. அவர்கள் அதை முயற்சித்தால், நாடு அவர்களை தடுத்து நிறுத்தும். அதனால் அரசியலமைப்புச் சட்டத்தை அழிக்க பின்கதவு வழியாக முயற்சிக்கும் ஆர்எஸ்எஸ், தனது ஆட்களை, முக்கிய அமைப்புகள், நீதித்துறை, ஊடகங்களில் ஈடுபடுத்தி வருகிறது. 


என் பாட்டி 32 தோட்டாக்களை உடலில் வாங்கி கொல்லப்பட்டார், என் தந்தை கொல்லப்பட்டார். ஆனால் யாரிடமும் எனக்கு வெறுப்பு இல்லை. வெறுப்பு என்னை விட்டு விலகிய நாள், என் இதயத்தில் காதல் மட்டுமே மலர்ந்தது, வேறொன்றுமில்லை. வெறுப்பின் ஒரு துளி கூட என்னிடம் இல்லை. நான் வெறுப்பை வளர்க்கவில்லை.

அதனால் பாஜக, பிரதமர் மோடி ஜி, அமித் ஷா, ஆர்எஸ்எஸ்காரர்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன், உங்கள் இதயத்தில் உள்ள பயத்தை கைவிடுங்கள், வெறுப்பு மறைந்து விடும். உங்கள் பயமே நாட்டில் வெறுப்பை உண்டாக்கி சேதத்தை ஏற்படுத்துகிறது. அன்பு உள்ளவர்கள் ஒரு போதும் பயப்பட மாட்டார்கள், அஞ்சம் கொண்டவர்களால் நேசிக்க முடியாது. இதுவே எனது பாதயாத்திரையின் செய்தியும் கூட. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News