உலக கோப்பை வெற்றி.. இந்திய மகளிர் அணிக்கு ராகுல் வாழ்த்து
- எண்ணற்ற இளம் பெண்களை அச்சமின்றி கனவு காணவும் ஊக்கப்படுத்தியுள்ளது.
- நீங்கள் உலகக் கோப்பையை மட்டும் வெல்லவில்லை, ஒவ்வொரு இந்தியரின் இதயத்தையும் வென்றுள்ளீர்கள்.
மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. ஷபாலி வர்மா 87 ரன்னும், தீப்தி சர்மா 58 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 45 ரன்னும் எடுத்தனர்.
299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லாரா வால்வார்ட் நிலைத்து நின்று விளையாடி 101 ரன்களில் அவுட் ஆனார். மற்ற வீராங்கனைகள் சீரான இடைவெளியில் அவுட் ஆகி வெளியேறினர்.
45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், நமது பெண்கள் அணி வரலாறு படைத்து, பில்லியன் கணக்கான இதயங்களைத் தொட்டுவிட்டனர். உங்கள் வீரம், மனோதிடம் மற்றும் நேர்த்தியான ஆட்டம் இந்தியாவுக்குப் புகழைக் கொண்டு வந்துள்ளதுடன், எண்ணற்ற இளம் பெண்களை அச்சமின்றி கனவு காணவும் ஊக்கப்படுத்தியுள்ளது.
நீங்கள் கோப்பையை மட்டும் தூக்கவில்லை; தேசத்தின் உணர்வுகளையே தூக்கி நிறுத்தியுள்ளீர்கள்.ஜெய் ஹிந்த்! " என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025-இல் அபார வெற்றி பெற்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். உங்களின் குறிப்பிடத்தக்க செயல்பாடு, மன உறுதி மற்றும் குழு செயல்பாடு ஆகியவை தேசத்துக்கு அளப்பரிய பெருமையைத் தேடித் தந்துள்ளது.
இந்த வெற்றி வெறும் விளையாட்டு மைல்கல் மட்டுமல்ல; இது பெண்களின் சக்தி மற்றும் தலைமைத்துவத்தைப் பறைசாற்றும் ஒரு கொண்டாட்டம். இது மில்லியன் கணக்கானவர்களுக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது.
முழு தேசமும் இந்த மகத்தான தருணத்தைக் கொண்டாட ஒன்றிணைந்து நிற்கிறது. நீங்கள் உலகக் கோப்பையை மட்டும் வெல்லவில்லை, ஒவ்வொரு இந்தியரின் இதயத்தையும் வென்றுள்ளீர்கள். உங்கள் அனைவருக்கும் பிரகாசமான வெற்றிகரமான எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன்!" என்று தெரிவித்துள்ளார்.