கருப்பு ஆடை, மாஸ்க் அணிந்து வரும் பெண் தலைவர்: யார் இந்த புஷ்பம் பிரியா சவுத்ரி?
- பீகார் மாநிலத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
- தி புளுரல்ஸ் பார்ட்டி 243 இடங்களிலும் போட்டியிடுகிறது.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சட்டசபை தேர்தல் இரு கட்டமாக நடைபெற உள்ளது. இதையடுத்து அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்த முறை பீகாரில் குறிப்பிடும் கட்சியாக 'தி புளுரல்ஸ் பார்ட்டி' திகழ்கிறது. முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகளான புஷ்பம் பிரியா சவுத்ரி ஆரம்பித்திருக்கும் இந்தக் கட்சிதான் அங்கு புதிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.
இந்த முறை 243 இடங்களிலும் அவரது கட்சி போட்டியிடுகிறது, பாதி இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அந்தக் கட்சிக்கு நகரம் சின்னம் வழங்கப்பட்டுள்ளது.
தர்பங்காவைச் சேர்ந்த முன்னாள் ஜே.டி.யு எம்.எல்.ஏ. வினோத் குமார் சவுத்ரியின் மகள்தான் இந்த புஷ்பம் பிரியா.
1987, ஜூன் 13-ம் தேதி பிறந்த புஷ்பம் பிரியா தர்பங்காவில் பள்ளிப்படிப்பை முடித்தார். அதன்பின், பட்டப்படிப்புக்காக புனே சென்றார். தொடர்ந்து இங்கிலாந்தில் உயர்கல்வியை படித்தார்.
சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் மேம்பாட்டுப் படிப்பில் முதுகலைப் பட்டமும், 2019-ல் லண்டன் பொருளாதாரப் பள்ளியில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். இதையடுத்து, அரசியலில் ஈடுபட்ட அவர் பீகார் அரசின் சுற்றுலா மற்றும் சுகாதாரத் துறைகளில் ஆலோசகராகப் பணியாற்றினார்.
இந்நிலையில், பீகாரின் தர்பங்காவிலிருந்து போட்டியிடும் புஷ்பம் பிரியா சவுத்ரி, கருப்பு உடை மற்றும் மாஸ்க் மூலமே வலம் வருகிறார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
எனது கட்சியின் பெயர் மக்களின் பிரச்சனைகளைப் பிரதிபலிக்கிறது. பன்மை என்பது அனைத்துச் சாதிகள் மற்றும் மதங்களைச் சேர்ந்தவர்களும் ஒன்றாக ஆட்சி செய்ய வேண்டும் என்பதாகும்.
நான் வித்தியாசமானவள். எங்களுக்கென சொந்த சித்தாந்தம் உள்ளது.
அரசியல்வாதிகள் ஏன் வெள்ளை உடை அணிகிறார்கள் என்று எனக்குத் தெரியாததால் கருப்பு நிறத்தை அணிகிறேன்.
தேர்தல் அரசியலில் வெற்றியைப் பெறும்வரை மாஸ்க்கை கழற்றமாட்டேன் என தெரிவித்தார்.
இந்த முறை 243 இடங்களிலும் அவரது கட்சி போட்டியிடுகிறது, பாதி இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அந்தக் கட்சிக்கு நகரம் சின்னம் வழங்கப்பட்டுள்ளது.