இந்தியா

எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்கா இன்று வேட்புமனு தாக்கல்

Update: 2022-06-27 01:52 GMT
  • ஜனாதிபதி தேர்தலில் போட்டி என்பது எனது தனிப்பட்ட மோதல் அல்ல.
  • 'ரப்பர் ஸ்டாம்பாக' இருக்கும் ஒருவர் ஜனாதிபதி மாளிகைக்கு தேவையில்லை.

புதுடெல்லி :

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார். அவர் பல்வேறு கட்சி தலைவர்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார். இன்று (திங்கட்கிழமை) அவர் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் அவருடன் செல்கிறார்கள்.

இந்நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேற்று அளித்த பேட்டியில் யஷ்வந்த் சின்கா கூறியிருப்பதாவது:- ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ.க. எம்.பி.யான எனது மகன் ஜெயந்த் சின்காவின் ஆதரவை பெறாததில் எனக்கு எந்த தர்மசங்கடமும் இல்லை. அவர், அரசு தர்மத்தை பின்பற்றுகிறார்.

நான் எனது தேச தர்மத்தை பின்பற்றுவேன். தற்போது நடைபெற உள்ளது வெறும் ஜனாதிபதி தேர்தல் அல்ல. இது, அரசின் சர்வாதிகார கொள்கைகளை எதிர்ப்பதற்கான ஒரு முன்னோக்கிய அடி. இந்தக் கொள்கைகளை எதிர்த்தாக வேண்டும் என்று இந்திய மக்களுக்கு சொல்லும் செய்தியே இத்தேர்தல்.

பழங்குடியின பெண்ணான திரவுபதி முர்முவை ஜனாதிபதி ஆக்குவதால் அந்த மொத்த சமூகமும் உயர்வு பெற்றுவிடாது. இது வெறும் அடையாளம் என்பதைத் தவிர வேறில்லை. ஜனாதிபதி தேர்தலில் போட்டி என்பது எனது தனிப்பட்ட மோதல் அல்ல. நமது ஜனநாயகமும், அரசியல் சாசனமும் அபாயத்துக்கு உள்ளாகியிருக்கும் இன்றைய சூழலில், நாட்டைக் காக்க மக்கள் விழித்தெழ வேண்டும்.

'ரப்பர் ஸ்டாம்பாக' இருக்கும் ஒருவர் ஜனாதிபதி மாளிகைக்கு தேவையில்லை. அப்படி ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், பேரழிவு ஏற்படும். நான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால், அரசியல் எதிரிகளை குறிவைக்க அரசு நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவேன். நீதியும், நியாயமும் நிலைபெறுவதை உறுதிசெய்வேன்.'

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News