குஜராத் பாலம் விபத்து: ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல்
- குஜராத் பாலம் இடிந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
- பாலம் இடிந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.
புதுடெல்லி:
குஜராத் மாநிலம் ஆனந்த் மற்றும் வதோதரா மாவட்டங்களை இணைக்கும் வகையில் காம்பிரா-முக்பூர் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
வதோதராவின் பாத்ரா தாலுகாவில் மாஹி ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலத்தின் ஒரு பகுதி இன்று காலை 7.30 மணியளவில் யாருமே எதிர்பாராத வகையில் இடிந்து விழுந்தது. பாலம் இடிந்து விழுந்ததால் அங்கு வந்த பல வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மாஹி ஆற்றில் விழுந்தன.
இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.
குஜராத் பாலம் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ. 50,000 நிவாரண நிதியும் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், குஜராத் பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜனாதிபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் பால விபத்தில் பலர் உயிரிழந்த செய்தி மிகவும் துயரமானது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய எனது பிரார்த்தனைகள் என தெரிவித்தார்.