தேர்தலில் நான் போட்டியிடவில்லை- பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு
- கட்சி பணிகளில் கவனம் செலுத்த போகிறேன்.
- அனைத்து தொகுதிகளிலும் ஜன்சுராஜ் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்யப்போகிறேன்.
பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் 6 மற்றும் 11-ந் தேதிகளில் 2 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தேர்தல் வியூக அமைப்பாளராக இருந்து அரசியல்கட்சி தலைவராக உருவெடுத்துள்ள பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன்சுராஜ் கட்சியும் போட்டியிடுகிறது. தனது சொந்த தொகுதியான கர்கஹார் அல்லது ராஷ்டீரிய ஜனதா தளம் கோட்டையான ரகோபூர் தொகுதியில் போட்டியிடப் போவதாக முன்பு பிரசாந்த் கிஷோர் அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில் அவர் தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இதில் ரித்தேஷ் ரஞ்சன் கர்கஹார் தொகுதி வேட்பாளராகவும், சஞ்சய் சிங் ரகோபூர் தொகுதி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டனர்.
இதனால் பிரசாந்த் கிஷோர் போட்டியிடமாட்டார் என்பது உறுதியானது. தேர்தலில் போட்டியிட்டால் மற்ற தொகுதியில் கவனம் செலுத்த முடியாது என்பதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-
நான் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. கட்சி பணிகளில் கவனம் செலுத்த போகிறேன். அனைத்து தொகுதிகளிலும் ஜன்சுராஜ் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்யப்போகிறேன். பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வியை தழுவும். அக்கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வராது. நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் 25 இடங்களில் வெல்வதற்கு கூட கடுமையாக போராட வேண்டி இருக்கும். நிதிஷ்குமார் மீண்டும் முதல்-மந்திரியாக வர மாட்டார்.
இந்தியா கூட்டணியின் நிலைமையும் சரியாக இல்லை. ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரசுக்கு இடையே தொகுதி பங்கீட்டில் மோதல் ஏற்பட்டுள்ளது என்றார்.