இந்தியா

அடுத்த வருடம் மீண்டும் இதே இடத்தில்...! பிரதமர் மோடி அதீத நம்பிக்கை

Published On 2023-08-15 05:16 GMT   |   Update On 2023-08-15 05:16 GMT
  • செங்கோட்டையில் பிரதமர் மோடியின் 10-வது உரை இதுவாகும்
  • மீண்டும் பிரதமராகி செங்கோட்டையில் கொடியேற்றுவேன் எனத் தெரிவித்துள்ளார்

இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினவிழாவையொட்டி பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.

அப்போது, அடுத்த ஆண்டு நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளின் முன்னேற்றத்தை டெல்லி செங்கோட்டையில் இருந்து பட்டியலிடுவேன் எனக் கூறினார்.

பிரதமர் மோடியின் 10 ஆண்டு பிரதமர் பதவி அடுத்த ஆண்டு மே மாதத்துடன் முடிவடைகிறது. இது அவரது 10-வது சுதந்திர தின உரையாகும். அடுத்த முறையும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மட்டுமே செங்கோட்டையில் கொடியேற்ற முடியும்.

அந்த வகையில்தான் மீண்டும் பிரதமராகி கொடியேற்றுவேன் என்பதை இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி கூறும்போது ''மாற்றத்திற்கான உறுதி, என்னுடைய செயல்பாடு மீண்டும் ஒருமுறை என்னை இங்கே கொண்டு வந்துள்ளது. வரவிருக்கும் ஐந்தாண்டுகள் முன்எப்போதும் இல்லாத வளர்ச்சி மற்றும் 2047-க்குள் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக வேண்டும் என்ற கனவை நனவாக்கும் பொன்னான தருணமாக இருக்கும். அடுத்த வருடம், ஆகஸ்ட் 15-ந்தேதி இதே செங்கோட்டையில் நாடு அடைந்துள்ள வளர்ச்சி சாதனைகளை பட்டியலிடுவேன்'' என்றார்.

இந்திய மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமர் ஆவதை தடுக்க எதிர்க்கட்சிகள் I.N.D.I.A. கூட்டணியை உருவாக்கியுள்ளன. அதேவேளையில் 50 சதவீத வாக்குகளுடன் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்க தேசிய ஜனநாயக கூட்டணி திட்டமிட்டுள்ளது.

Tags:    

Similar News