இந்தியா

ஜி.எஸ்.டி. வரி குறைப்பால் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு- பிரதமர் மோடி பெருமிதம்

Published On 2025-10-26 13:20 IST   |   Update On 2025-10-26 13:20:00 IST
  • சந்தைகளில் உள்நாட்டுப் பொருட்களை வாங்குவது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
  • வந்தே மாதரம் பாடலின் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இன்று 127-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:-

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை ஒவ்வொரு இந்தியரையும் பெருமையால் நிரப்பியுள்ளது. தற்போது மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தின் இருள் நிலவிய பகுதிகளிலும் கூட மகிழ்ச்சியின் தீபங்கள் ஏற்றப்பட்டு உள்ளன.

தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை ஆபத்தில் ஆழ்த்திய மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க மக்கள் விரும்புகிறார்கள்.

ஜி.எஸ்.டி வரி சலுகை மக்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதன்மூலம் சந்தைகளில் உள்நாட்டுப் பொருட்களை வாங்குவது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த நாள் முழு நாட்டிற்கும் மிகவும் சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும். அவர் நவீன காலத்தில் நாட்டின் மிகச்சிறந்த அறிவாளிகளில் ஒருவராக இருந்து வருகிறார். அவரது பிறந்தநாளான அக்டோபர் 31-ந்தேதி நாடு முழுவதும் ஒற்றுமைக்கான ஓட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் பங்கேற்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

இந்தியாவின் தேசியப் பாடலான வந்தே மாதரம் 150 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்டது. வருகிற நவம்பர் 7-ந்தேதி வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு நிறைவைக் கொண்டாட நாடு தயாராகி வருகிறது. பல நூற்றாண்டுகளாக அடிமைத்தனத்தால் பலவீனமடைந்த இந்தியாவிற்கு புதிய வாழ்க்கையை ஊட்டுவதற்காக பங்கிம் சந்திர சட்டோபாத்யாயால் இயற்றப்பட்டது. அந்த பாடலை 1896-ம் ஆண்டு ரவீந்திரநாத் தாகூர் முதல் முறையாக பாடினார்.

இதன் முதல் வார்த்தையே நம் இதயங்களில் உணர்ச்சிகளின் எழுச்சியைத் தூண்டும். ஒரு சிரமமான தருணம் இருந்தால் வந்தே மாதரம் என்ற கோஷம் 140 கோடி இந்தியர்களையும் ஒற்றுமையின் ஆற்றலால் நிரப்புகிறது. அது நமது பெருமை.

வந்தே மாதரம் 19-ம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம். ஆனால் அதன் ஆன்மா ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான இந்தியாவின் அழியாத உணர்வுடன் இணைக்கப்பட்டுள்ளது. வந்தே மாதரம் பாடலின் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு மோடி பேசினார்.

Tags:    

Similar News