இந்தியா

திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தபஸ்ராயுடன் செல்பி புகைப்படம் எடுத்து கொண்ட லலித்ஜா (வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளவர்).

பாராளுமன்றத்தில் அத்துமீறிய வழக்கு: திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுடன் முக்கிய குற்றவாளிக்கு தொடர்பு? பா.ஜ.க குற்றச்சாட்டு

Published On 2023-12-15 06:01 GMT   |   Update On 2023-12-15 06:01 GMT
  • மேற்கு வங்க பா.ஜனதா தலைவர் டாக்டர் சுகந்தோ மஜும்தார் தனது எக்ஸ் தளத்தில் ஒரு படத்தை வெளியிட்டார்.
  • தாக்குதலில் மூளையாக செயல்பட்ட லலித்ஜா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தபஸ்ராயுடன் நீண்ட காலமாக நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்.

புதுடெல்லி:

பாராளுமன்றத்தில் அத்துமீறிய வழக்கில் மூளையாக செயல்பட்ட லலித்ஜாவுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. தபஸ்ராயுடன் நீண்ட காலமாக தொடர்பு இருந்ததாக பா.ஜனதா கட்சியினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

இது தொடர்பாக மேற்கு வங்க பா.ஜனதா தலைவர் டாக்டர் சுகந்தோ மஜும்தார் தனது எக்ஸ் தளத்தில் ஒரு படத்தை வெளியிட்டார்.

அதில், தபஸ்ராயுடன், லலித்ஜா செல்பி புகைப்படம் எடுத்து கொண்ட காட்சி உள்ளது. அந்த புகைப்படத்துடன் மஜும்தாரின் பதிவில், நமது ஜனநாயக கோவில் மீதான தாக்குதலில் மூளையாக செயல்பட்ட லலித்ஜா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தபஸ்ராயுடன் நீண்ட காலமாக நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்.

எனவே அவரது உடந்தையை விசாரிக்க இந்த ஆதாரம் போதாதா? என பதிவிட்டு இருந்தார்.

இதே போல பா.ஜனதா கட்சியின் தகவல் தொழில் நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா கூறுகையில், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் இப்போது திரிணாமுல் காங்கிரசுடன் தொடர்பு வைத்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது என கூறியதோடு, இந்தியா கூட்டணி மீதும் புகார் கூறியுள்ளார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை திரிணாமுல் காங்கிரஸ் மறுத்துள்ளது. பார்வையாளர்களாக வந்தவர்களுக்கு பாஸ் வழங்கிய பா.ஜனதா கட்சியின் மைசூர் எம்.பி. பிரதாப் சிம்ஹாவை விசாரிக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

அதே நேரம் பாஸ்களை வழங்கியதை தவிர குற்றம் சாட்டம் பட்டவர்களுடன் தனக்கு எந்த தொடர்பு கிடையாது என பிரதாப் சிம்ஹா மறுத்துள்ளார். 

Tags:    

Similar News