எல்லையில் 2-வது நாளாக பாகிஸ்தான் அத்துமீறல் - தக்க பதிலடி கொடுத்த இந்திய வீரர்கள்
- நேற்று முன்தினம் இரவு இந்தியா-பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் கடுமையான பதட்டம் உருவானது.
- நேற்று இரவு இரு தரப்புக்கும் நிகழ்ந்த துப்பாக்கி சண்டை விடிய விடிய நீடித்ததாக தெரிய வந்து உள்ளது.
புதுடெல்லி:
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவி 26 சுற்றுலா பயணிகளை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்றனர். ஒவ்வொரு சுற்றுலா பயணிகளையும் அவர்கள் இந்துவா? என்று விசாரித்து அறிந்த பிறகு தலையில் சுட்டுக்கொன்றது மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் பாகிஸ்தான் தனது எல்லைப் பகுதிகளில் போர் விமானங்களையும், ராணுவ வீரர்களையும் குவித்து உள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்தியா-பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் கடுமையான பதட்டம் உருவானது. அன்று இரவு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் விதிகளை மீறி அத்துமீறல்களில் ஈடுபட்டனர்.
இந்தியாவின் எல்லைப் பகுதி ராணுவ நிலைகள் மீது பல இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். உடனடியாக அவர்களுக்கு இந்தியா தரப்பில் இருந்து பதிலடி கொடுக்கப்பட்டது. அதில் இந்தியா தரப்பில் எந்த பாதிப்பும் இல்லை என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தொடர்ந்து விதிகளை மீறி அத்துமீறல்களில் ஈடுபட்டனர். இந்திய நிலைகள் மீது நேற்று இரவும் அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.
இதையடுத்து இந்தியா தரப்பில் இருந்து பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டது. பல இடங்களில் இந்திய வீரர்கள் துப்பாக்கி சூட்டை தீவிரப்படுத்தினார்கள். அதன் பிறகே பாகிஸ்தான் வீரர்கள் தங்களது நிலைக்கு பின்வாங்கி சென்றனர்.
நேற்று இரவு இரு தரப்புக்கும் நிகழ்ந்த துப்பாக்கி சண்டை விடிய விடிய நீடித்ததாக தெரிய வந்து உள்ளது. இந்தியா தரப்பில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய ராணுவம் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற பயத்தில் பாகிஸ்தான் எல்லை வீரர்கள் யூகத்தின் அடிப்படையில் துப்பாக்கி சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தான் தரப்பில் இது தொடர்பாக கூறுகையில், தாங்கள் முழு அளவில் உஷார்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.