இந்தியா

டெல்லி கோவில் நிகழ்ச்சியின்போது மேடை சரிந்து விழுந்து விபத்து- ஒருவர் பலி

Published On 2024-01-28 09:47 GMT   |   Update On 2024-01-28 09:47 GMT
  • விபத்து தொடர்பாக விழா ஏற்பாட்டாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  • காயம் மற்றும் எலும்பு முறிவு ஏற்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டெல்லியில் உள்ள கல்காஜி மந்திர் கோவிலில் நேற்று நள்ளிரவு சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில், 1500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இரவு முழுவதும் பாடல்கள், நடனங்கள் மற்றும் வழிபாடுகளை உள்ளடக்கிய 'ஜாகரனா' அல்லது 'ஜாக்ரதா' என்று அழைக்கப்படும் ஒரு இந்து சடங்கு கோவிலில் நடந்தது.

இந்தநிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது அங்கு அமைக்கப்பட்டு இருந்த இரும்புமேடை திடீரென சரிந்து விழுந்தது. இதில், பெண் ஒருவர் சிக்கி பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். மேலும், 17 பேர் காயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயம் மற்றும் எலும்பு முறிவு ஏற்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக விழா ஏற்பாட்டாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

இதுகுறித்து டெல்லி போலீசார் கூறுகையில், " அனுமதியின்றி இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு உள்ளது. நள்ளிரவு 12:30 மணியளவில், உயரமான மேடையில் அமர்ந்திருந்தவர்களின் எடையைத் தாங்க முடியாமல் மேடை இடிந்து கீழே அமர்ந்திருந்தவர்கள் மீது விழுந்தது" என தெரிவித்தனர்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், எக்ஸ் இணையதளத்தில் இந்த சம்பவத்தில் பலியான பெண்ணுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். மேலும், சம்பவத்தில் காயம் அடைந்த 17 பேர் விரைவில் குணமடைய வாழ்த்தினார்.

பெரிய அளவில் நிகழ்ச்சிகளை நடத்தும்போது, பாதுகாப்பு வசதிகளை சிறப்பாக கவனித்து, அசம்பாவிதம் ஏதும் நிகழாத வகையில் ஏற்பாடுகள் செய்யுமாறு, டெல்லி மக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்" என கூறி உள்ளார்.

Tags:    

Similar News