எதிர்க்கட்சி தலைவர் பதவியில் ஆர்வம் இல்லை: கட்சிப்பதவி கேட்கும் அஜித் பவார்
- மகாராஷ்டிர மாநில சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக உள்ளார்
- தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக பவார் மகள் நியமிக்கப்பட்டார்
சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.-வும் மகாராஷ்டிராவின் எதிர்க்கட்சி தலைவராகவும் இருப்பவர் அஜித் பவார்.
மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 24-வது தொடக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது:-
எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் நான் கடுமையாக நடந்து கொள்ளவில்லை என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது. நான் ஒருபோதும் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட வேண்டும் என்று ஆர்வம் காட்டியது கிடையாது. ஆனால், கட்சி எம்.எல்.ஏ.க்கள் வற்புறுத்தியதால் அதை ஏற்றுக்கொண்டேன்.
கட்சி அமைப்பில் ஏதாவது ஒரு பதவியை எனக்கு ஒதுக்குங்கள். என்னிடம் ஒப்படைக்கப்படும் எந்தவொரு பொறுப்புக்கும், நியாயமாக பணியாற்றுவேன்'' என்றார்.
சமீபத்தில் சரத் பவார், தனது மகளும் மக்களவை எம்.பி.யுமான சுப்ரியா சுலேவை செயல் தலைவராக நியமனம் செய்தார். பிரபுல் பட்டேலை மற்ற மாநிலங்களுக்கான செயல் தலைவராக நியமித்திருந்தார்.
இந்த நிலையில் அஜித் பவாரின் இந்த பேச்சு, மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.