பீகார் தேர்தல்: முதல்முறையாக மறுவாக்குப்பதிவு இல்லை, உயிரிழப்பு இல்லை
- 1995 ஆம் ஆண்டு 4 முறை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
- 2005ஆம் ஆண்டு 660 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடைபெற்றது.
பீகாரில் கடந்த 6-ந்தேதி மற்றும் 11-ந்தேதி ஆகிய இரண்டு நாட்களில் 243 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே, தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெற்றது. தற்போது 200 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
பொதுவாக தேர்தலின்போது வன்முறை போன்ற சம்பவங்கள் நடைபெறும். இதனால் உயிர்ப்பலி ஏற்படும் அபாயமும் ஏற்படும். வாக்குச்சாவடிகளில் இயந்திரம் வேலை செய்யவில்லை. வாக்கு அளிக்க அனுமதிக்கவில்லை. கள்ள ஓட்டு செலுத்திவிட்டனர் என குற்றச்சாட்டு எழும். இதனால் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்படும்.
ஆனால் பீகாரில் முதன்முறையாக வாக்குப்பதிவின்போது வன்முறையால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. அதேபோல் எந்த வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு என்பது இல்லை.
கடந்த 1985 சட்டசபை தேர்தலின்போது 63 பேர் உயிரிழந்துள்ளனர். 156 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடபப்ட்டது.
1990 தேர்தலின்போது வாக்குப்பதிவு வன்முறை தொடர்பாக 87 பேர் உயிரிழந்துள்ளனர்.
1995ஆம் ஆண்டு எப்போதும் இல்லாத அளவிற்கு வன்முறை வெடித்ததாலும், வாக்காளர் பட்டியலில் முறைகேடு காரணமாகவும் டி.என். சேஷன் நான்கு முறை தேர்தலை ஒத்திவைத்தார்.
2005ஆம் ஆண்டு 660 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடைபெற்றது.