இந்தியா

மாபியாக்கள் இனி அச்சுறுத்த முடியாது... எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதில் அளித்த யோகி ஆதித்யநாத்

Published On 2023-04-18 14:11 GMT   |   Update On 2023-04-18 14:11 GMT
  • 2012 முதல் 2017 வரை மாநிலத்தில் 700க்கும் மேற்பட்ட கலவரங்கள் நிகழ்ந்ததாக முதல்வர் தகவல்
  • உத்தரபிரதேச அரசு சிறப்பான சட்டம் மற்றும் ஒழுங்கு ஏற்பாடுகளுக்கு உத்தரவாதம் அளிப்பதாக பேச்சு

லக்னோ:

உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த என்கவுண்டர் மற்றும் ரவுடி அத்திக் அகமது, அவரது சகோதரர் படுகொலை போன்ற சம்பவங்கள் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. பாஜக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன.

இந்நிலையில், லக்னோ மற்றும் ஹர்டோய் மாவட்டங்களில் ஜவுளி பூங்காக்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டு பேசும்போது, எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதில் அளித்தார். அவர் பேசியதாவது:-

இனி உத்தரபிரதேசத்தில் மாபியாக்களும், குற்றவாளிகளும் தொழிலதிபர்களை அச்சுறுத்த முடியாது. ஒரு காலத்தில் உத்தரப் பிரதேசம் கலவரங்களுக்கு பெயர் பெற்ற மாநிலமாக இருந்தது. பல மாவட்டங்களின் பெயர்களை கேட்டாலே மக்கள் அச்சமடைவார்கள். இப்போது பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

2012 முதல் 2017 வரை மாநிலத்தில் 700க்கும் மேற்பட்ட கலவரங்கள் நிகழ்ந்தன. ஆனால், 2017-2023 காலகட்டத்தில் ஒரு கலவரம்கூட வெடிக்கவில்லை. ஊரடங்கு உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. அந்த நிலை ஏற்படவில்லை. உத்தரபிரதேச அரசு சிறப்பான சட்டம் மற்றும் ஒழுங்கு ஏற்பாடுகளுக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

இவ்வாறு யோகி ஆதித்யநாத் பேசினார்.

Tags:    

Similar News