இந்தியா

ஆற்று வெள்ளத்தில் மூங்கில் படகில் சென்ற காட்சி

ஆற்றில் பாலம் இல்லாததால் மூங்கில் படகு செய்து மகளை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற பெற்றோர்

Published On 2023-08-05 13:03 IST   |   Update On 2023-08-05 13:03:00 IST
  • மாரியம்மாவுக்கு திடீரென கடுமையான காய்ச்சல் மற்றும் வலிப்பு ஏற்பட்டது.
  • 17 கிலோ மீட்டர் தூரம் மகளை தோளில் சுமந்து சென்று ஒடிசா மாநிலம் ராயகடாவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம், பார்வதிபுரம் மன்யம் மாவட்டம், கொரமடாவை சேர்ந்தவர் மாரியம்மா (வயது 7). பழங்குடியின சிறுமி.

நேற்று முன்தினம் மாரியம்மாவுக்கு திடீரென கடுமையான காய்ச்சல் மற்றும் வலிப்பு ஏற்பட்டது. இதனை கண்ட மாரியம்மாவின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மகளை எப்படியாவது ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர்.

ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என்றால் தெலுங்கானா மாநில எல்லைக்கும் ஒடிசா மாநில எல்லைக்கும் நடுவில் உள்ள நாகவலி ஆற்றை கடந்து செல்ல வேண்டும்.

ஆனால் தற்போது பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆற்றைக் கடந்து செல்ல படகு வசதி இல்லை.

இருப்பினும் தனது மகளின் உயிரை காப்பாற்ற முடிவு செய்து அவரது பெற்றோர் மூங்கிலை வெட்டி எடுத்து வந்து படகு செய்தனர். தனது மகளை மடியில் வைத்துக்கொண்டு கடும் வெள்ளத்திலும் போராடியபடி அக்கரையை அடைந்தனர்.

பின்னர் 17 கிலோ மீட்டர் தூரம் மகளை தோளில் சுமந்து சென்று ஒடிசா மாநிலம் ராயகடாவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இது தெலுங்கானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News