இந்தியா

மோன்சன் மாவுங்கல் மோசடி வழக்கு: கேரள போலீஸ் ஐ.ஜி. அதிரடி கைது

Published On 2023-08-24 05:34 GMT   |   Update On 2023-08-24 05:34 GMT
  • மோசடி வழக்கில் 4-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
  • விசாரணைக்கு ஆஜராகுமாறு குற்றப்பிரிவு போலீசார் அவருக்கு மூன்றாவது முறையாக அழைப்பு விடுத்தனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தை சேர்ந்த பழங்கால பொருட்கள் விற்பனையாளர் மோன்சன் மாவுங்கல். இவர் பொதுமக்கள் பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்தாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் மோன்சன் மாவுங்கல், போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின. இதுகுறித்து விசாரித்தபோது, மோன்சன் மாவுங்கல் மோசடியில் போலீஸ் அதிகாரி உள்பட பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில் மோன்சன் மாவுங்கல்லுக்கு எதிரான வழக்கு எர்ணாகுளம் மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. கேரள மாநில போலீஸ் ஐ.ஜி. லட்சுமணன் மீது மோசடி, உள்ளிட்ட பல்வேறு குற்றச் சாட்டுகள் எழுந்தன. அவர் அந்த மோசடி வழக்கில் 4-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.

மோசடி வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு ஐ.ஜி. லட்சுமணன் அழைக்கப்பட்டார். ஆனால் அவர் மருத்துவ காரணங்களை கூறி இரண்டு முறை விசாரணைக்கு ஆஜராகவில்லை. ஆகவே விசாரணைக்கு ஆஜராகு மாறு குற்றப்பிரிவு போலீசார் அவருக்கு மூன்றாவது முறையாக அழைப்பு விடுத்தனர்.

மேலும் மோசடி வழக்கில் ஐ.ஜி. லட்சுமணனுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி குற்றப்பிரிவு போலீசார் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மோசடி வழக்கு விசாரணையை தவிர்க்க முயற்சிப்பதாகவும், முரண்பாடான மருத்துவ சான்றிதழ்களை அளித்து விசாரணை அதிகாரி முன்பு ஆஜராவதை தவிர்க்க முயற்சிப்பதாக வும் ஐ.ஜி. லட்சுமணன் மீது குற்றப்பிரிவு தெரிவித்தது.

இந்நிலையில் மோசடி வழக்கில் ஐ.ஜி.லட்சுமணனை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை அதிகாரி அவரிடம் விசாரணை நடத்தினார்.

அதே நேரத்தில் ஐ.ஜி. லட்சுமணனுக்கு கேரள ஐகோர்ட்டு இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதையடுத்து அவரை குற்றப்பிரிவு போலீசார் விடுவித்தனர்.

Tags:    

Similar News