இந்தியா

41 பேரை மீட்க ஆட்கள் மூலம் துளையிடும் பணியும் தொடங்கியது: செங்குத்தாக இதுவரை 22 மீட்டர் தூரத்துக்கு குழாய் அமைப்பு

Published On 2023-11-27 05:54 GMT   |   Update On 2023-11-27 05:54 GMT
  • இன்னமும் 65 மீட்டர் தூரத்துக்கு மலை உச்சியில் இருந்து துளை போட வேண்டியது உள்ளது.
  • மேலும் 4 இடங்களில் இருந்து 41 தொழிலாளர்கள் சிக்கி உள்ள சுரங்கப்பாதை நோக்கி துளை போடும் பணிகள் நடந்து வருகின்றன.

உத்தரகாசி:

உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா மலை பகுதியில் 4.50 கிலோ மீட்டர் தூரத்துக்கு மலைக்கு கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வந்தது.

கடந்த 12-ந்தேதி தீபாவளி தினத்தன்று காலை சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. 70 மீட்டர் தூரத்துக்கு இடிந்ததால் சுரங்கப் பாதையின் மையப் பகுதிக்குள் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.

அவர்களை மீட்க 70 மீட்டர் இடிபாடுகளுக்குள் குழாய்களை செலுத்தி மீட்கும் பணி நடந்தது. முதல் தடவை நடந்த முயற்சியில் எந்திரம் பழுது அடைந்ததால் அதிநவீன ஆகர் எந்திரம் கொண்டு வரப்பட்டு துளையிட்டு குழாய் அமைக்கும் பணி நடந்தது.

47 மீட்டர் தூரத்துக்கு துளையிட்டு குழாய் அமைக்கப்பட்ட நிலையில் ஆகர் எந்திரத்தின் துளையிடும் பிளேடுகள் வெடித்து சிதறி நொறுங்கி போனதால் மீட்பு பணிகளில் முடக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மலை உச்சியில் இருந்து துளை போட்டு 41 தொழிலாளர்களை மீட்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி மலை உச்சியில் சாலை அமைக்கப்பட்டு நவீன எந்திரம் கொண்டு செல்லப்பட்டது. 2 இடங்களில் இருந்து துளை போட முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று காலை மலை உச்சியில் இருந்து செங்குத்தாக சுரங்கப்பாதை நோக்கி துளையிடும் பணிகள் நடந்து வருகின்றன.

அப்படி துளையிடும் பகுதியில் 700 மி.மீட்டர் சுற்றளவு கொண்ட இரும்பு குழாய்களை உள்ளே செலுத்தும் பணிகளும் நடந்து வருகிறது. இன்று காலை வரை 22 மீட்டர் தூரத்துக்கு மலை உச்சியில் இருந்து செங்குத்தாக துளை போடப்பட்டு உள்ளது.

இன்னமும் 65 மீட்டர் தூரத்துக்கு மலை உச்சியில் இருந்து துளை போட வேண்டியது உள்ளது. இன்னும் 4 நாட்கள் அதற்கு தேவைப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பக்க வாட்டில் கிடைமட்டமாக துளை போடும் பணியில் சிக்கி இருந்த ஆகர் எந்திரத்தை அகற்றும் பணிகள் நடந்து வந்தன. இன்று காலை அந்த எந்திரம் முழு மையாக அகற்றப்பட்டது. இதையடுத்து அந்த பாதையில் ஆட்கள் மூலம் துளையிடும் பணி தொடங்கி உள்ளது.

இதுவரை ஆகர் எந்திரம் மூலம் 47 மீட்டருக்கு துளையிட்டு குழாய் பொறுத்தப்பட்டு இருப்பதால் அந்த குழாய் வழியாக 2 வீரர்கள் உள்ளே சென்று தொடர்ந்து அங்கு தோண்டும் பணியை மேற்கொண்டுள்ளனர். ஒரு வீரர் துளையிடும் பணியை மேற்கொள்வார். மற்றொருவர் அந்த இடிபாடு கழிவுகளை வெளியில் அள்ளும் பணியில் ஈடுபடுவார்.

இப்படி ஆட்கள் மூலம் துளைபோடும் பணி சுமார் 10 முதல் 12 மீட்டர் தூரத்துக்கு செய்ய வேண்டி உள்ளது. இந்த ஆட்கள் மூலம் துளைபோடும் பணியை செய்ய சுமார் 36 மணி நேரம் ஆகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே மேலும் 4 இடங்களில் இருந்து 41 தொழிலாளர்கள் சிக்கி உள்ள சுரங்கப்பாதை நோக்கி துளை போடும் பணிகள் நடந்து வருகின்றன. மொத்தம் 6 விதமாக துளை போடப்பட்டு குழாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. எந்த பாதையில் முதலில் பணிகள் நிறைவு பெறுகிறதோ அதன் வழியாக 41 தொழிலாளர்களும் மீட்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே 41 தொழிலாளர்கள் சிக்கி சில்க்யாரா மலை பகுதியில் இன்று முதல் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. இன்று பிறபகல் முதல் அங்கு மழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை இலாகா எச்சரித்துள்ளது. இதனால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதை தவிர்க்க மாற்று ஏற்பாடுகளை மீட்பு குழுவினர் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News