இந்தியா

வேணுகோபால் தூத்

கடன் மோசடி வழக்கில் வீடியோகான் அதிபர் கைது: 3-வது நபர் மீது சி.பி.ஐ. நடவடிக்கை

Published On 2022-12-26 08:16 GMT   |   Update On 2022-12-26 08:16 GMT
  • வீடியோகான் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட கடன் திரும்பிவராத கடனாக அறிவிக்கப்பட்டது.
  • 2020-ம் ஆண்டு சாந்தா கோச்சார், தீபக் கோச்சார் ஆகியோருக்கு சொந்தமான ரூ.78 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கி இருந்தது.

புதுடெல்லி:

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தலைமை செயல் அதிகாரியாகவும், நிர்வாக இயக்குனராகவும் சாந்தா கோச்சார் செயல்பட்டு வந்தார்.

அவருடைய பதவிக்காலத்தில் தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி எந்தவித விதிமுறைகளையும் பின்பற்றாமல் வீடியோகான் குழுமத்துக்கு ரூ.3,250 கோடி கடன் வழங்கினார்.

அந்த கடன் தொகை சாந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் நடத்தி வந்த நிறுவனத்திற்கு பல்வேறு தவணைகளாக மாற்றப்பட்டது. மேலும் வீடியோகான் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட கடன் திரும்பிவராத கடனாக அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டு மே மாதத்தில் விசாரணை தொடங்கியது. விசாரணையில் குற்றம் உறுதியானதை தொடர்ந்து அதே ஆண்டு அக்டோபர் மாதம் சாந்தா கோச்சார் பணி நீக்கம் செய்யப்பட்டார். ரூ.3,250 கோடி கடன் மோசடி தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த கடன் மோசடி தொடர்பாக சாந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார், வீடியோகான் நிறுவன அதிபர் வேணுகோபால் தூத் ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது. குற்றவியல் சதி, ஊழல் தடுப்பு சட்ட விதிகள் கீழ் அவர்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது.

கடந்த 2020-ம் ஆண்டு சாந்தா கோச்சார், தீபக் கோச்சார் ஆகியோருக்கு சொந்தமான ரூ.78 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கி இருந்தது.

இதற்கிடையே கடன் மோசடி வழக்கில் ஐ.சி.ஐ. சி.ஐ. முன்னாள் தலைமை செயல் அதிகாரியும், முன்னாள் நிர்வாக இயக்குனருமான சாந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகியோரை சி.பி.ஐ. சமீபத்தில் கைது செய்து இருந்தது. கடந்த ஆண்டு இந்த மோசடி வழக்கில் சாந்தா கோச்சார் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையாகி இருந்தார்.

இந்நிலையில் ரூ.3,250 கோடி கடன் மோசடி வழக்கில் வீடியோகான் அதிபர் வேணுகோபால் தூத் இன்று கைது செய்யப் பட்டார். மும்பையில் வைத்து அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

சாந்தா கோச்சார், தீபக் கோச்சார் கைது செய்யப் பட்ட 3 தினங்களில் வேணு கோபால் தூத் கைதாகி உள்ளார். இதுவரை 3 பேர் மீது சி.பி.ஐ. நடவடிக்கை எடுத்துள்ளது. 

Tags:    

Similar News