இந்தியா

பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி - வெளியான தகவல்

Published On 2025-04-23 12:07 IST   |   Update On 2025-04-23 12:07:00 IST
  • கோழைத் தனமான தாக்குதலுக்கு உலகம் முழுக்க கண்டனம் எழுந்துள்ளது.
  • பல்வேறு நாட்டு தலைவர்கள் காஷ்மீர் தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பு.

காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய கோழைத் தனமான தாக்குதலுக்கு உலகம் முழுக்க கண்டனம் எழுந்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் புதின் உள்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் காஷ்மீர் தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் பிரதமர் மோடியை போனில் தொடர்பு கொண்டு இதுபற்றி கேட்டு அறிந்தனர்.

இதன் காரணமாக காஷ்மீர் தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதிகள் மீது மிக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு தயாராகி வருகிறது. பிரதமர் மோடி தலைமையில் இன்று பிற்பகல் மத்திய மந்திரி சபையின் பாதுகாப்பு அமைச்சரவை குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

இதற்கிடையே பஹல்காம் சுற்றுலா தலத்தில் தாக்குதல் நடத்தியது லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் நிழல் படையான "தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட்" என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த படையில் உள்ள தற்கொலைப் படை தீவிரவாதிகள்தான் தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள்.

அந்த தீவிரவாதிகளில் 6 பேர் 8 பேர் வரை பஹல்காம் சுற்றுலா தலத்துக்கு வந்ததாக கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. அவர்களில் 2 பேர் அடையாளம் தெரிய வந்துள்ளது. ஒருவன் பெயர் ஆசீப். மற்றொருவன் பெயர் கவ்ரி.

இவர்கள் இருவரும் பஹல்காம் பகுதியில் பதிவான கண்காணிப்பு காமிரா காட்சிகளில் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் பிடிபட்டால் பஹல்காம் தாக்குதல் பின்னணி முழு விவரமும் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் சைபுல்லா என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவன் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தில் மூத்த கமாண்டர்களில் ஒருவன் ஆவான்.

இந்தியாவால் தேடப்படும் கொடூரமான தீவிரவாதியான ஹபீஸ்சையத்தின் வலதுகரமாக இவன் செயல்பட்டு வருகிறான். இவன்தான் பஹல்காம் தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டி கொடுத்தவன் என்று தெரிய வந்துள்ளது.

பாதுகாப்பு படையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் பஹல்காம் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா நேரடியாக தொடர்பில் இருப்பது உறுதியாகி இருக்கிறது. இதன் மூலம் காஷ்மீர் ரத்த களறி ஆனதின் பின்னணியில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ். இருப்பதும் உறுதியாகி இருக்கிறது.

இந்த கோழை தீவிரவாதிகளை வேட்டையாட பாரபட்சமின்றி செயல்பட வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News