இந்தியா

ராமநகர் தொகுதியில் குமாரசாமி மகன் நிகில் படுதோல்வி

Published On 2023-05-14 01:05 GMT   |   Update On 2023-05-14 01:05 GMT
  • தனது மகனுக்காக இந்த தொகுதியை அனிதா குமாரசாமி விட்டு கொடுத்திருந்தார்
  • 10,715 ஓட்டுகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி

பெங்களூரு

ஜனதாதளம் (எஸ்) கட்சி மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமார சாமியின் மகன் நிகில் குமாரசாமி. இவர் கன்னட திரையுலகின் இளம் நடிகராக உள்ளார். இவர் அக்கட்சியின் இளைஞர் அணி தலைவராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் கோட்டையான கருதப்படும் ராமநகர் தொகுதியில் நிகில் குமாரசாமி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் இக்பால் ஹுசைனும், பா.ஜனதா சார்பில் கவுதம் மரிலிங்கே கவுடாவும் போட்டியிட்டனர்.

இதில் தொடக்க முதலே நிகில் குமாரசாமிக்கும், இக்பால் ஹுசைனுக்கும் இடையே போட்டி நிலவியது. இருப்பினும் இக்பால் ஹுசைன் ஒவ்வொரு சுற்று முடிவிலும் முன்னிலை பெற்று வந்தார்.

மொத்தம் 20 சுற்றுகள் ஓட்டு எண்ணிக்கை நடந்த நிலையில், 12, 13, 14 சுற்றுக்களில் காங்கிரஸ் வேட்பாளரை விட நிகில் கூடுதல் வாக்குகளை பெற்றார். இருப்பினும் முடிவில் 10 ஆயிரத்து 715 ஓட்டுகள் வித்தியாசத்தில் நிகில் குமாரசாமி தோல்வி அடைந்தார்.

ஏற்கனவே நிகில் குமாரசாமி கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக களமிறங்கிய மறைந்த நடிகர் அம்பரீசின் மனைவியும், நடிகையுமான சுமலதாவிடம் தோல்வி அடைந்திருந்தார். இந்த நிலையில், சட்டசபை தேர்தலிலும் நிகில் குமாரசாமி தோல்வியை சந்தித்து இருப்பது அக்கட்சி தலைவர்களான தேவகவுடா, குமாரசாமி ஆகியோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ராமநகர் மற்றும் சென்னப்பட்டணா தொகுதிகளில் குமாரசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். பின்னர் ராமநகர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதனால் இந்த தொகுதி இடைத்தேர்தலை சந்தித்தது. இதில் குமாரசாமியின் மனைவி அனிதா போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.

தற்போது தனது மகனுக்காக இந்த தொகுதியை அனிதா குமாரசாமி விட்டு கொடுத்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது. இந்த தொகுதி 2004-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை ஜனதாதளம் (எஸ்) கட்சி தொடர்ச்சியாக பெற்ற வெற்றிக்கு காங்கிரஸ் இந்த முறை முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

ராமநகர் தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் விவரம்:-

இக்பால் ஹுசைன் (காங்.) - 87,690

நிகில் குமாரசாமி (ஜனதாதளம்(எஸ்))-76,975

கவுதம் மரிலிங்கேகவுடா (பா.ஜனதா)- 12,912

நோட்டா- 880

Tags:    

Similar News