இந்தியா

கேரளாவில் உள்ளாட்சி தேர்தல்: 7 மாவட்டங்களில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு

Published On 2025-12-09 10:26 IST   |   Update On 2025-12-09 10:26:00 IST
  • முதல்கட்ட தேர்தலில் மொத்தம் 36,630 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்களில் ஆண்கள் 17,056 பேர். பெண் வேட்பாளர்கள் 19,573 பேர் ஆவர்.
  • பல வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாகவே ஏராளமான வாக்காளர்கள் வந்துவிட்டனர்.

கேரள மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் முடிவடைவதையடுத்து இன்று மற்றும் நாளை மறுநாள் (11-ந்தேதி) இரண்டு கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.

திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளம் பத்தினம்திட்டா, இடுக்கி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள 595 உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று தேர்தல் நடத்தப்பட்டது. 471 கிராம பஞ்சாயத்துகள், 75 தொகுதி பஞ்சாயத்துகள், 7 மாவட்ட பஞ்சாயத்துகள், 39 நகராட்சிகள், 3 மாநகராட்சிகளில் உள்ள 11,168 வார்டுகளில் வாக்குப்பதிவு நடந்தது.

இன்று நடந்த முதல்கட்ட தேர்தலில் மொத்தம் 36,630 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்களில் ஆண்கள் 17,056 பேர். பெண் வேட்பாளர்கள் 19,573 பேர் ஆவர். மொத்தம் 15,432 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. முதலில் காலை 6 மணிக்கு மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது.

அதன்பிறகு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து ஓட்டுப்போட்டு சென்றனர். காலையில் வாக்குப்பதிவு மந்தமாகவே நடந்தது. அனைத்து மாவட்டங்களிலும் முதல் இரண்டு மணி நேரத்தில் மிகக்குறைவான சதவீதமே வாக்குகள் பதிவாகியிருந்தது.

பல வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாகவே ஏராளமான வாக்காளர்கள் வந்துவிட்டனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று வாக்களித்தனர். மத்திய மந்திரி சுரேஷ்கோபி காலையிலேயே தனது மனைவி ராதிகா நாயருடன் திருவனந்தபுரத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் காத்து நின்று ஓட்டு போட்டார்.

இதேபோல் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகள் காலையிலேயே தங்களது பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்தனர். வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வரக்கூடிய வாக்காளர்கள் அனைவரும் ஓட்டுப்போடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஓட்டுப்பதிவு நடைபெற்ற அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பதட்டமான வாக்குச்சாவடிகள் என்று கண்டறியப்பட்ட இடங்களில் கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இன்று தேர்தல் நடைபெற்ற 7 மாவட்டங்களிலும் 70 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கேரள மாநிலத்தில் இரண்டாம் கட்டமாக திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் நாளை மறுநாள்(11-ந்தேதி) உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

Tags:    

Similar News