இந்தியா

நள்ளிரவு நேரத்தில் கேரள வழிபாட்டு தலங்களில் பட்டாசு வெடிக்க தடை: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Published On 2023-11-04 05:04 GMT   |   Update On 2023-11-04 05:04 GMT
  • கடவுளை சந்தோஷப்படுத்த பட்டாசுகளை வெடிக்க எந்த புனித நூலிலும் உத்தரவு இல்லை.
  • தற்போதைய உத்தரவை மீறி பட்டாசு வெடிப்பது குறித்து புகார் அளிக்கப்பட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என எச்சரித்தார்.

திருவனந்தபுரம்:

வழிபாட்டு தலங்களில் பட்டாசு வெடிப்பது தொடர்பாக கேரள ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், "கேரளாவில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களிலும் அதிக ஒலி எழுப்பக்கூடிய பட்டாசு மற்றும் வாண வேடிக்கைகளுக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும்" என்ற குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி அமித் ராவல் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத வழிபாட்டு தலங்களில் ஒற்றைப்படை மணி நேரத்தில் (நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரம்) பட்டாசு வெடிக்க கேரள ஐகோர்ட் தடை விதித்தது. மேலும் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், நீதிபதி அமித் ராவல் அமர்வு உத்தரவிட்டது.

இதுதொடர்பாக போலீஸ் உதவி கமிஷனர் தலைமையில் தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். நீதிபதியின் தனது தீர்ப்பில், கொச்சி மற்றும் பிற மாவட்ட போலீஸ் கமிஷனர் உதவியுடன் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் சோதனை நடத்தவும், அனைத்து மத ஸ்தலங்களிலும் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள பட்டாசுகளை கைப்பற்றவும் துணை ஆட்சியருக்கு உத்தரவிடுகிறேன் என்று கூறிய நீதிபதி, கடவுளை சந்தோஷப்படுத்த பட்டாசுகளை வெடிக்க எந்த புனித நூலிலும் உத்தரவு இல்லை என்று கருத்தும் தெரிவித்தார்.

சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்ய சோதனை நடத்த அறிவுறுத்திய நீதிபதி, தற்போதைய உத்தரவை மீறி பட்டாசு வெடிப்பது குறித்து புகார் அளிக்கப்பட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என எச்சரித்தார்.

Tags:    

Similar News