இந்தியா

மனைவியின் வாயை பசை போட்டு ஒட்டி கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்ற கணவர்

Published On 2025-02-13 12:00 IST   |   Update On 2025-02-13 12:00:00 IST
  • மஞ்சுளாவின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சித்த லிங்கேஸ்வராவை கைது செய்தனர்.

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா காரோ கியாதஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சித்த லிங்கேஸ்வரா. இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

சித்த லிங்கேஸ்வரா தனியார் நிறுவனத்திலும், மஞ்சுளா ஆயத்த ஆடை நிறுவனத்திலும் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவருடன் சித்த லிங்கேஸ்வரா அடிக்கடி சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதுபோல் சம்பவத்தன்று இரவும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது தனது மனைவியின் கழுத்தை நெரித்து சித்த லிங்கேஸ்வரா கொலை செய்ய முயன்றதாக தெரிகிறது.

அப்போது மஞ்சுளா சத்தம் போட்டதால் வீட்டில் கிடந்த பசையை (பெவி குவிக்) எடுத்து அவரது வாயில் போட்டு ஒட்டினார். அதன்பிறகும் அவரது கழுத்தை சித்த லிங்கேஸ்வரா நெரித்ததாக தெரிகிறது. முன்னதாக மஞ்சுளாவின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போலீசார் வருவதை பார்த்ததும் வீட்டில் இருந்து சித்த லிங்கேஸ்வரா தப்பி ஓடி விட்டார். பின்னர் உயிருக்கு போராடிய மஞ்சுளாவை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் போலீசார் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து மாதநாயக்கனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சித்த லிங்கேஸ்வராவை கைது செய்தனர்.

Tags:    

Similar News