குஜராத் மந்திரிசபை மாற்றம்: மந்திரி ஆனார் ஜடேஜா மனைவி
- குஜராத் மாநிலத்தில் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டது.
- இதில் ஜடேஜாவின் மனைவி உள்பட 19 புதுமுகங்கள் மந்திரியாக பதவியேற்றனர்.
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் முதல் மந்திரி பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. அங்கு அடுத்த ஆண்டு உள்ளாட்சி தேர்தலும், 2027-ம் ஆண்டு சட்டசபை தேர்தலும் நடக்கின்றன.
அதற்குமுன் மந்திரி சபையை மாற்றி அமைக்க முதல் மந்திரி முடிவு செய்தார். அவரது அறிவுறுத்தலின்படி, அவரைத் தவிர மீதி உள்ள 16 மந்திரிகளும் நேற்று முன்தினம் கூண்டோடு ராஜினாமா செய்தனர். அவர்களில் 6 பேரின் ராஜினாமாவை முதல் மந்திரி ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்நிலையில், நேற்று கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆச்சார்ய தேவ்ரத்தை முதல் மந்திரி பூபேந்திர படேல் சந்தித்தார். புதிய மந்திரிகள் பதவியேற்புக்கு அனுமதி கோரினார். கவர்னரும் ஒப்புதல் அளித்தார்.
இதையடுத்து, காந்தி நகரில் உள்ள மகாத்மா காந்தி மாநாட்டு மையத்தில் மந்திரி சபை விரிவாக்க நிகழ்ச்சி நடந்தது.
19 புதுமுகங்களுக்கு மந்திரி பதவி அளிக்கப்பட்டது. அவர்களுக்கு கவர்னர் ஆச்சார்ய தேவ்ரத் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
அவர்களில், ஆச்சரியப்படத்தக்க புதுமுகமாக கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா புதிய மந்திரியாக பதவியேற்றார். ஜடேஜாவும், அவருடைய மகளும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.