இந்தியா

தமிழ்நாட்டில் பீகார் மக்களுக்கு அவமதிப்பு - பிரதமர் மோடி பிரசாரம்

Published On 2025-10-31 02:33 IST   |   Update On 2025-10-31 02:41:00 IST
  • பிகாரில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி தோல்வியை சந்திக்க உள்ளது.
  • 243 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட பிகாரில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.

243 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட பிகாரில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தல் பிரசார களம் பரபரப்பாகி உள்ள நிலையில் நேற்று பீகாரில் சாப்ராவில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், பிகாரில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி தோல்வியை சந்திக்க உள்ளது. பிகார் மக்களை அவர்கள் குறைத்து மதிப்பிடுகிறார்கள். 

பஞ்சாபில் இருந்த காங்கிரஸ் முதல்வர் உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரைச் சேர்ந்தவர்களை மாநிலத்திற்குள் அனுமதிக்காதீர்கள் என்று பகிரங்கமாக கூறினார்.

அந்தச் சமயத்தில், அதே மேடையில், தற்போது நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கும் காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மகள்(பிரியங்கா காந்தி), அதற்குச் சந்தோஷமாக கைதட்டிக்கொண்டிருந்தார்.

அதேபோல் , கர்நாடகா, தெலுங்கானா காங்கிரஸ் தலைவர்கள், பீகார் மக்களை அவதூறு செய்கின்றனர். தமிழ்நாட்டில் கடினமாக உழைக்கும் பீகார் மக்களை திமுக துன்புறுத்துகிறது.

இவ்வளவு நடந்தும், பீகாரில் ஆர்ஜேடி அமைதியாக வாயடைத்துப் போனது போல் இருக்கிறது. இந்தத் தேர்தலில் அவர்கள் எல்லையைக் கடந்துவிட்டனர்.

பீகாரை அவமதித்த அதே காங்கிரஸ் தலைவர்களை, இப்போது ஆர்ஜேடி இங்கே பிரச்சாரம் செய்ய அழைத்துள்ளது" என பேசியுள்ளார்.  

முன்னதாக ஒடிசா சட்டமன்றத் தேர்தலின்போது, புரி ஜெகநாதர் கோயிலின் கருவூல சாவி தமிழ்நாட்டிற்கு சென்றுவிட்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியிருந்தார். இந்தநிலையில், பிகார் தேர்தலில் தமிழ்நாட்டை குறிப்பிட்டு பிரதமர் பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது.

Tags:    

Similar News