இந்தியா

வாக்கிங் போனது குத்தமா? நாய்க்காக நடந்த துப்பாக்கிச்சூடு.. 2 பேர் பலி..!

Published On 2023-08-18 10:11 GMT   |   Update On 2023-08-18 10:11 GMT
  • நாய்கள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட தொடங்கின
  • கோபத்தில் ரஜாவத் ஓடிச்சென்று தனது துப்பாக்கியை எடுத்து வந்தார்

மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியரை சேர்ந்தவர் ராஜ்பால் சிங் ரஜாவத். இவர் உரிமம் வாங்கி ஒரு ரைபிள் துப்பாக்கி வைத்திருந்தார். இதனால் இவரை காவலாளியாக பணியமர்த்தியது மத்திய பிரதேச இந்தோரில் உள்ள ஒரு நிறுவனம்.

இவ்வேலைக்காக இந்தோரில் வசித்து வந்த ரஜாவத்தின் அண்டை வீட்டுக்காரர் விமல் அசலா (35). அசலா, அந்நகரின் நிபானியா பகுதியில் முடி திருத்தும் நிலையம் வைத்துள்ளார். இவர்கள் இருவரும் சொந்தமாக ஆளுக்கொரு நாய் வளர்த்து வந்தனர். இருவரும் அவரவர் நாய்களுடன் தினமும் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம்.

இவர்கள் வழக்கம் போல நேற்று இரவு அப்பகுதியிலுள்ள கிருஷ்னா பாக் காலனியில் நடந்து சென்ற போது அவர்களது இரு நாய்களும் ஒன்றுடன் ஒன்று சண்டையிட தொடங்கின. இதனை தொடர்ந்து நாய்களின் உரிமையாளர்களான இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் சண்டையாக மாறியது.

இதில் கோபமடைந்த ரஜாவத், வேகமாக தான் வசிக்கும் முதல் தளத்தில் உள்ள வீட்டிற்குள் ஓடிச் சென்று தனது துப்பாக்கியை எடுத்து கொண்டு பால்கனிக்கு வந்தார். வந்ததும் முதலில் வானத்தை நோக்கி ஒரு முறை சுட்ட ரஜாவத், அசாலா நின்றிருந்த இடத்தை நோக்கி சரமாரியாக சுட்டார்.

இதில் அசலா மற்றும் அங்கிருந்த 27 வயதான ராகுல் வர்மா என்பவரின் மீது குண்டு பாய்ந்தது. அங்கு சண்டையின் போது அருகில் நின்றிருந்தவர்களில் 6 பேர் காயமடைந்தனர். அதில் 2 பேர் மிக தீவிரமாக காயமடைந்துள்ளனர்.

அங்கிருந்தவர்கள் தகவல் அளித்ததை அடுத்து கஜ்ரானா காவல் நிலையத்தை சேர்ந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். குண்டு பாய்ந்த அனைவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அசலாவும், ராகுல் வர்மாவும் உயிரிழந்ததாக அறிவித்தனர். காயமடைந்தவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து ரஜாவத், அவருக்கு உதவியதாக அவர் மகன் சுதிர் மற்றும் உறவினர் சுபம் ஆகிய மூவரை காவல்துறை கைது செய்து, வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கி இருக்கிறது.

எந்தவித முன்பகையும் இல்லாதவர்களுக்கிடையே நாய்களுக்கிடையே ஏற்பட்ட சண்டை காரணமாக மோதல் ஏற்பட்டதும், மோதல் கொலையில் முடிந்து இருப்பதும் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

Similar News